
இந்த வண்ணங்கள் உடலின் மீது மட்டுமே பூசப்படுகின்றன என்றாலும், இதில் உள்ள நச்சுப் பொருள்கள் தோல் தசைகளை ஊடுருவி ரத்தத்தில் கலக்கும் தன்மை உடையவை என்பதால்தான் ஹோலி வண்ணங்களில் கலந்துள்ள உலோக நச்சுப் பொருள் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைய மற்றொரு காரணம், மூலிகைச் சாயம் என்று விற்பனை செய்யப்பட்ட வண்ணங்களிலும் இந்த நச்சுப் பொருள்கள் இருந்தது ஆய்வு முடிவுகளில் தெரியவந்திருப்பதுதான்.
ரசாயன வண்ணங்களில் ஒரு கிலோவுக்கு 36 கிராம் காரீயம், 4.8 கிராம் காட்மியம் கலந்திருந்தால், மூலிகை வண்ணத்தில் காரீயம் 8 கிராமும், காட்மியம் 2.8 கிராமும் கலந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த வண்ண நச்சுப் பொருள்கள் குழந்தைகளையும் கர்ப்பிணிப் பெண்களையுமே உடனடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்குபவை.
இந்த வண்ணம் வெறும் ஹோலி பண்டிகையோடு முடிந்து போவதில்லை. பெண்கள் ரங்கோலி (கோலம்) போடுவதற்காக வாங்கும் கோலப்பொடியிலும் இந்த நச்சுப் பொருள்கள் இன்னும் கூடுதலாகவே இருக்கிறது. இவற்றைப் பெண்கள் தங்கள் கைகளால்தான் தூவுகின்றனர்.
குழந்தைகளை அதிகம் கவரும் இனிப்புகளிலும், மிட்டாய், சாக்லேட்டுகளிலும் கலக்கப்படும் வண்ணங்களிலும் காட்மியம், பாதரசம் போன்ற நச்சுப் பொருள்கள் இருக்கின்றன. இந்த வண்ணக் கலவைகள் எந்தவிதக் கட்டுப்பாடும், தர நிர்ணயமும் இல்லாமல் உள்ளூர் உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் கவலைக்குரியதாக இருக்கிறது.
பெண்கள் பயன்படுத்தும் லிப்-ஸ்டிக்-கில் இத்தகைய நச்சுப்பொருள்கள் உள்ளன. இதன் அளவு குறித்தும், எந்தெந்த லிப்-ஸ்டிக்கில் அதிக அளவு பாதரசம், காட்மியம், காரீயம் ஆகியன இருக்கலாம், எந்தெந்த பிராண்டுகளில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்தும் ஆய்வு முடிவுகளை எச்சரிக்கை உணர்வுடன் வெளியிடுகிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எம்.டி.ஏ.) இந்த முடிவுகளை அறிந்துகொள்ள சிறிய தொகையைச் செலுத்த வேண்டும் என்றாலும், அங்கே அத்தகைய விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் அத்தகைய ஆய்வுகளும் அதன் முடிவுகளும் வெளிப்படையாக அறிவிக்கப்படுவதில்லை. மக்களிடையே விழிப்புணர்வும் இல்லை.
கோடையில் குளிர்பானம் அருந்தாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இந்தக் குளிர்பானங்கள் உண்மையிலேயே, அந்த பாட்டிலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனத்தின் குளிர்பானம்தானா என்பதை உறுதிப்படுத்த முடியுமா என்றால் சந்தேகம்தான். கோடை காலத்தில் இந்தியக் குளிர்பான சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்ய பன்னாட்டு நிறுவனங்களாலேயே முடியாத நிலைமை இருப்பதால், இந்த இடைவெளியில் உள்ளூர் போலிகள் நுழைந்துவிடுகின்றன. "பெட்' பாட்டில்களில் உள்ள குளிர்பானங்கள் தவிர்த்து, கண்ணாடி பாட்டில்களில் உள்ள பெரும்பாலான குளிர்பானங்களில் இந்தப் போலிகள் அதிக அளவில் இருக்கின்றன. இவற்றின் வண்ணக் கலவை எந்தவிதத் தரமும் இல்லாதவை.
சில ஓட்டல்களில் சில்லி சிக்கன், கோபி மஞ்சூரியன் சாப்பிட்டு கையைக் கழுவினாலும் போகாத ஆரஞ்சு நிறம் விரல்களில் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு சமையலிலும் உணவிலும்கூட நிறச்சேர்க்கை கலந்து இருக்கிறது.
இந்தியச் சந்தையில் உள்ள பெயின்ட் நிறுவனங்களில் உள்ள இரண்டு, மூன்று நிறுவனங்களைத் தவிர, மற்ற அனைத்து நிறுவனங்களின் பெயின்டுகளிலும் காரீயம், காட்மியம், பாதரசம் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இந்த நிறுவனங்கள் படிப்படியாகத் தங்கள் தொழிற்சாலையை நவீனப்படுத்தி, இந்த நச்சுப் பொருள்களின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு உறுதி அளித்தன. ஆனால், இப்போது எந்த அளவுக்கு இந்த வண்ணங்களில் உலோக நச்சுக்கள் குறைந்திருக்கின்றன என்று அரசும் அதிகாரிகளும் பேசவே இல்லை. மெüனம்தான் நீடிக்கிறது. முன்பெல்லாம் வீட்டுச் சுவர்களுக்கு எந்தவிதமான உலோக நச்சுக் கலப்படமும் இல்லாத சுண்ணாம்புக் கலவையால் வெள்ளை அடித்துவந்த நிலைமை மாறிவிட்டது. வெளிர் நீலம், வெளிர் மஞ்சள் என்பதெல்லாம் பழைய பாணியாகிவிட்டது. அடர் சிவப்பு, அடர் மஞ்சள், அடர் நீலம், அடர் பழுப்பு என்பதுதான் இப்போதைய பாணியாக உருவெடுத்துள்ளது. இவற்றில் உலோக நச்சு பற்றி யாருக்கும் தெரியாது.
குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் நெகிழ்வுத்தன்மையுள்ள பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டதாக இருந்தால்,அவற்றைக் குழந்தைகள் கடிக்கும்போது இதன் விஷம் குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அத்தகைய பொம்மைகள் தடை (பெயரளவில்) செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த பொம்மைகள் தடையற்று விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் வண்ணங்களும் எந்தக் கட்டுப்பாடு அல்லது ஆய்வுக்கும் உள்பட்டதாகத் தெரியவில்லை.
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் புற்றுநோய்த் திசுக்களை ஆய்வு செய்தபோது, புற்றுநோயால் பாதிக்கப்படாத திசுக்களில் இருந்த அளவைக் காட்டிலும் அதிக அளவில் உலோக நச்சுக்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திசுக்களில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வண்ணம் கண்களைக் கவர்கின்றன, திசுக்கள் அதன் உலோக நச்சுக்களை வாங்கிக் கொள்கின்றன. இதுபற்றி அரசுக்குப் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்வது எவ்வண்ணம்!
dinamani
0 கருத்துகள்: on "வண்ணக் கோளாறுகள்"
கருத்துரையிடுக