மத்திய ரிசர்வ் படையினர் 75 பேர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டதற்கு தார்மீக பொறுப்பேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முன்வந்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் வெள்ளிக் கிழமை (09-04-2010) அன்று நடைபெற்ற மத்திய ரிசர்வ் படையின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப.சிதம்பரம், "சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் 75 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கொல்லப்பட்டதற்கு என் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகிறது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ நானே பொறுப்பு என்று பேச்சு எழுந்துள்ளது.
கடந்த புதன் அன்று சம்பவ இடத்துக்கு சென்று விட்டு திரும்பினேன். மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 75 மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளேன்.
மாவோயிஸ்டுகளின் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதற்கு நானே முழு தார்மீக பொறுப்பேற்பதாக அந்த கடிதத்தில் தெரியப்படுத்தியுள்ளேன்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு நான் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கு மேல் வேறு எதுவும் நான் கூறவிரும்பவில்லை. என்னால் விரிவாக எதையும் கூறமுடியாது," என்று கூறினார்.
ப.சிதம்பரத்தின் இப்பேச்சைத் தொடர்ந்தே, அவர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வந்தது. உள்துறை அமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு நேற்று முன்தினம் அனுப்பியதாகவும். அதனை பிரதமர் நிராகரித்துவிட்டதாகவும் பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
0 கருத்துகள்: on "உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் ராஜினாமாவை ஏற்க பிரதமர் மறுப்பு!"
கருத்துரையிடுக