22 ஏப்., 2010

இடதுசாரி(நக்ஸல்) தீவிரவாதம் நாட்டின் சட்டம் ஒழுங்கையே சீர்குலைக்கும் பேராபத்து மிக்கது- மன்மோகன் சிங்

இடதுசாரி தீவிரவாதம் நாட்டின் சட்டம் ஒழுங்கையே சீர்குலைக்கும் பேராபத்து மிக்கது என்று எச்சரிக்கை விடுத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

தில்லியில் புதன்கிழமை குடிமைப்பணிகள் தினத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: இடதுசாரி தீவிரவாதிகள் பின்பற்றும் நக்ஸலிசம் உள் நாட்டுப் பாதுகாப்புக்கே பேராபத்து விளைவிக்கக் கூடியது. சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் நடந்த அண்மை சம்பவம் இதை உணர்த்தும் என்றார்.

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் ஏப்ரல் 6ம் தேதி நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியதில் 76 போலீஸôர் இறந்தனர். இதே மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து ஐந்து சிஆர்பிஎப் முகாம்கள் மீது நக்ஸல்கள் துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர்.
இது தவிர மேற்குவங்கம், பிகார், ஜார்க்கண்ட், ஆந்திரம், ஒரிஸô, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நக்ஸல்கள் பிரச்னை பெரும் சவாலாக விளங்கிவருகிறது. இந்த பின்னணியில் பிரதமர் மன்மோகன் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.

நக்ஸலிசம் எங்கு வேர்விட்டு படர்கிறது என்று பார்த்தால் அது வளர்ச்சி அடையாமல் பின்தங்கி இருக்கும் இடங்களில்தான். இதை நாம் புரிந்துகொண்டு பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்த முழு முனைப்பு காட்டவேண்டும். அந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னேற்றத் திட்டங்களின் பலன் போய்ச் சேர்வதை உறுதி செய்தாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நக்ஸல்களால் உள்நாட்டுப் பாதுகாப்புக்கே பேராபத்து இருப்பதை உணர்ந்து அந்த பிரச்னைக்கு முடிவு காண்பது அவசியம். நக்ஸல் பிரச்னைக்கு முடிவு காண வழி முறைகளை கண்டுபிடித்தாகவேண்டும்.

அரசின் அதிகாரத்துக்கும், நாட்டின் ஜனநாயக ஆட்சி அமைப்பு முறைக்கும் சவால்விடுவது போல் நக்ஸல்கள் செயல்படுகிறார்கள். பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் ஏழை எளியவர்களை தம் பக்கம் ஈர்த்து, அவர்களின் காவலர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு நக்ஸல்கள் வளர்கின்றனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் அவர்களை ஒடுக்க தெளிவான நல்ல பலன் தரக்கூடிய நடவடிக்கைகளை நாம் எடுத்தாக வேண்டும். அவர்களின் கொட்டத்த ஒடுக்க வேண்டுமானால் அவர்களுக்கு யாரும் அடைக்கலமோ ஊக்கமோ தரக்கூடாது.

மாவட்ட ஆட்சியர்கள் போன்ற முக்கிய பொறுப்புகளில் இருக்கும் உயர் அதிகாரிகள் நாட்டில் உள்ள பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தி வளம் கொழிப்பதாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களால் பின்தங்கிய பகுதிகளும் பலன்பெறவேண்டும்.

பின்தங்கிய பகுதிகளில் வாழ்வது பெரும்பாலும் ஏழை பழங்குடிகளே. அவர்களுக்கு அரசின் முன்னேற்றத் திட்டங்களால் எந்த பயனும் கிட்டுவதில்லை.

தகவல்தொழில் நுட்பத் துறை நுட்பங்களை பயன்படுத்தி நலத் திட்டங்களை யாருக்காக கொண்டு வந்தோமோ அவர்களையும் இணைத்து அமல்படுத்தவேண்டும். அப்போதுதான் ஊழலுக்கு இடமின்றி இந்த திட்டங்களை செம்மையாக நிறைவேற்ற முடியும். மேலும் நலத்திட்ட அமலாக்கத்தில் ஒளிவு மறைவுக்கும் இடம் இருக்காது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முன்னேற்றத் திட்டங்கள் சில குறிப்பிட்ட பிரிவினரின் நன்மைக்காக மட்டும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. யாரும் விடுபடாமல் எல்லா துறைகளும் எல்லா பிரிவினரும் முன்னேற்றம் பெற வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம்.

நமது நாடு துரித பொருளாதார வளர்ச்சி அடைந்து வருவதால் அதன் மூலம் கிடைக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டு வறுமை, கல்லாமை, நோய்களிலிருந்து மக்களை கட்டிக் காக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் பிரச்னை இருக்காது என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
source:dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இடதுசாரி(நக்ஸல்) தீவிரவாதம் நாட்டின் சட்டம் ஒழுங்கையே சீர்குலைக்கும் பேராபத்து மிக்கது- மன்மோகன் சிங்"

கருத்துரையிடுக