புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலை வழக்கு விசாரணையில் திரைமறைவில் நடந்துவரும் நாடகங்களைக் குறித்து சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சோலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சப்மிஷனில், விசாரணையை குஜராத்திற்கு வெளியே நடத்த அரசுதரப்பு வழக்கறிஞர் சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு கடிதம் எழுதியதாக குற்றஞ்சாட்டை முன்வைத்த பொழுதுதான் சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனத்தை தெரிவித்தது.
நீதிபதிகளான டி.கெ.ஜெயின், பி.சதாசிவம், அஃப்தாப் ஆலம் ஆகியோரைக் கொண்ட மூன்று உறுப்பினர் பெஞ்ச் கோபால் சுப்ரமணியத்திடம் "இதனை யார் உங்களிடம் கூறினார்? இவ்வழக்கின் திரைமறைவில் என்னவெல்லாமோ நடக்கிறது என்பதுதான் எங்களுக்கு தோன்றுகிறது." என தங்களது கண்டனத்தை அவரிடம் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்டவல்லுநர்தான் கோபால் சுப்ரமணியம். "தங்களுக்கு இவ்விபரம் எங்கிருந்து கிடைத்தது" என்று நீதிபதிகள் வினவிய பொழுது, "பத்திரிகைகளிலிருந்து" என்று பதில் கூறினார் கோபால் சுப்ரமணியம்.
சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் இடையே நடப்பதெல்லாம் பத்திரிகைகள் அறிவது துரதிர்ஷ்டவசமானதாகும். ஆனால், பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளின் அடிப்படையில் அல்ல நீதிமன்றம் செயல்படுவது, என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டினார்.
சுப்ரமணியத்தின் சப்மிஷனை குஜராத் அரசிற்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதகி எதிர்த்தார். இந்த வழக்கில் மத்திய அரசுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? என அவர் கேள்வி எழுப்பினார். "இவ்வழக்கில் மத்திய அரசு கட்சிக்காரர் அல்ல. பின்னர் அவர்களுக்கு ஏன் இவ்வளவு ஈடுபாடு? விசாரணையை மாற்ற அரசு தரப்பு வழக்கறிஞர் கோரியதுக் குறித்து குஜராத் அரசுக்கு கூட தெரியாது" என அவர் தெரிவித்தார்.
மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளான கீதா ஜோஹ்ரியும், சிவானந்த் ஜாவும் வழக்கு விசாரணையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு புனர் பரிசோதிக்க வேண்டுமென்ற எஸ்.ஐ.டியின் மனுவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பெஞ்ச் கூறியது.
சாட்சிகளை அரசுக்கெதிராக வாக்குமூலம் அளிக்க பயிற்சி அளித்து அனுப்பியதாகவும், இனப்படுகொலையைக் குறித்து வழக்கில் அதிகாரமில்லாமல் தலையிடுவதாகவும் கூறும் குஜராத் அரசின் குற்றச்சாட்டுகளுக்கு மறுபடி அளிக்க என்.ஜி.ஓக்களுக்கு நீதிமன்றம் 3 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி குஜராத் இனப்படுகொலைத் தொடர்பாக குல்பர்க் சொசைட்டி, ஓத், சர்தார்புரா, நரோதா காவ், நரோதாபாடியா, பாரான்புரா, மச்சிபீர், தார்ஸாலி, பாந்தர்வாதா, ராகவ்பூரா ஆகிய 10 வழக்குகளை எஸ்.ஐ.டி புலனாய்வு விசாரணைச் செய்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "குஜராத் இனப்படுகொலை வழக்கு: திரைமறைவில் நடக்கும் நாடகங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் கடும் கோபம்"
கருத்துரையிடுக