புதுடெல்லி:1996 ஆம் ஆண்டு லஜ்பத் நகரில் நடந்த குண்டுவெடிப்புடன் தொடர்புப்படுத்தி கைதுச்செய்யப்பட்டு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு நிரபராதி என விடுதலைச் செய்யப்பட்ட காஷ்மீரைச் சார்ந்த 4 பேர்களிடம் அரசு மன்னிப்புக் கோரவேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி கோரியுள்ளது.
14 ஆண்டுகள் சிறையிலடைத்த பிறகு குற்றமற்றவர் என்று கூறி விடுதலைச் செய்தது ஆயுள்தண்டனை முடிந்து விடுதலைப் பெறுவதற்கு சமமாகும் என கமிட்டி உறுப்பினர்களான குருசரண் சிங், எஸ்.எ.ஆர்.கீலானி, ரோனா வில்ஸன், அமித் பட்டாச்சார்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
"புலனாய்வுத்துறைகளின் அவதூறுப் பிரச்சாரத்திற்கும், பத்திரிகைகளின் பொய்யான செய்திகளுக்கும் பிறகு ஒரு நாள் நிரபராதி என விடுதலைச் செய்வதால் சிறையிலடைக்கப்பட்டவர்களின் வாழ்வில் ஒரு மாற்றமும் நிகழாது. குண்டுவெடிப்பு வழக்கில் இல்லாததையெல்லாம் கற்பனையில் கலந்து செய்தியாக வெளியிட்ட பத்திரிகைளும், இவர்களை வழக்கில் சிக்கவைத்த அதிகாரிகளும் இப்பொழுது என்ன சமாதானம் கூறப்போகிறார்கள்?" என கமிட்டி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
"அப்பாவிகளை குற்றவாளிகளாக்கிய சிறையில் தள்ளிய இவர்கள் எப்பொழுதாவது விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்களா? அல்லது புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக கேள்வி எழுப்பினால் அவர்களின் மன உறுதியை குலைத்துவிடும் எனக்கூறப் போகிறார்களா?" என கமிட்டி கேட்கிறது.
"அரசியல் நிலைப்பாடுகளில் உறுதியாக நிற்கும் ஒரு சமூகத்திற்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்களின் தொடர்கதைதான் இச்சம்பவம். ’ஒரு கஷ்மீரி என்பதாலே இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமா?’ என குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விசாரணைக்கிடையில் கேள்வி எழுப்பியதிலிருந்து இந்தியாவின் நீதிபீடம் கஷ்மீரிகளிடம் காண்பிக்கும் அநீதி தெளிவாகிறது.
கஷ்மீரில் ஏராளமானோர் சட்டத்திற்கு புறம்பாக ரகசிய சிறைக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பொழுது சித்திரவதைக்கெதிரான மசோதா ஒரு கொடூரமான நகைச்சுவையாகும்.
சட்டத்திற்கு புறம்பான சிறை, பொய்வழக்கில் சிக்கவைப்பது என்பதெல்லாம் கஷ்மீரில் சர்வசாதாரணமாக நடைபெற்று வரும் வேளையில் அரசியல் சிறைக்கைதிகளின் பாதுகாப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மனித உரிமை மீறல்களுக்கெதிராக போராட்டம் நடத்தியதற்காக நூற்றுக்கணக்கான பேர் சட்டத்திற்கு புறம்பான நிலையில் கஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்றிற்கெதிராகத்தான் கஷ்மீர் மக்கள் அமைதியான முறையில் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் போராட்டம் நடத்தினர்." எனவும் கமிட்டி சுட்டிக்காட்டியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு: நான்கு நிரபராதிகளிடம் அரசு மன்னிப்புக்கோர கோரிக்கை"
கருத்துரையிடுக