அதிமுகவினரால் 3 மாணவிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் வரும் ஜூலை 27,28,29 ஆகிய தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அதிமுக ஆட்சியில் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியதையடுத்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவை விவசாய பல்கலைக்கழக மாணவிகள் கல்வி்ச் சுற்றுலா சென்று கொண்டிருந்த நிலையில் அந்த பஸ்ஸை தர்மபுரியில் அதிமுகவினர் தடுத்து நிறுத்தி தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய அப்பாவி மாணவிகள் பஸ்சுடன் எரிந்து சாம்பலாயினர்.
இந்த வழக்கில் அதிமுக தர்மபுரி நகரச் செயலாளர் நெடுஞ்செழியன், தர்மபுரி எம்ஜிஆர் மன்றத்தைச் சேர்ந்த ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான முனியப்பன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து மூன்று பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதிகள் சிங்வி மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் சுஷில் குமார் ஆஜரானார். அவரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ரிமாண்ட் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களின் நகல்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, தமிழக அரசின் வழக்கறிஞர் தனஞ்ஜெயனுக்கு உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பஸ் எரிப்பு வழக்கில் வரும் ஜூலை 27, 28, 29 ஆகிய தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் என்றும், வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் ஜூலை 13க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
source:thatstamil

0 கருத்துகள்: on "தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: ஜூலையில் இறுதி விசாரணை- உச்சநீதிமன்றம்"
கருத்துரையிடுக