டெல்லி நாடாளுமன்றத்தில் இனி தலைவர்களுக்கு புதிய சிலைகள் மற்றும் உருவப்படங்கள் திறக்கப்படக் கூடாது என மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான குழு மக்களவை மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமையில் கூடி சமீபத்தில் விவாதித்தது. ஏற்கனவே அதிக சிலைகள் மற்றும் உருவப்படங்கள் உள்ளதால் நாடாளுமன்றத்தின் விசாலமான தோற்றத்தை பராமரிக்க இனி புதிய சிலைகள் மற்றும் படங்களை அனுமதிப்பதில்லை என அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற பொது விவகாரக் குழுவால் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட, என்.டி.ராமாராவ் உள்ளிட்ட சில தலைவர்களின் உருவப்படங்கள் திறப்பது தொடர்பான விஷயத்தில் இக்குழுவின் கூட்டம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாஜக தலைவர் எல்.கே.அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதா ராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தில் தலைவர்களின் படங்கள் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் ஆனால் அந்தப் படங்களை நாடாளுமன்ற நூலகத்தில் ஒப்படைத்து விடுவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் படங்கள் வைக்க அனுமதி மறுத்து அதற்கென படங்கள் வைக்க தனி மாடம் ஒன்றை, நூலகத்தில் 2004-ம் ஆண்டு ஏற்படுத்தினார் அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி.
புதிய சிலைகள் அமைக்கப்படுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற பாரம்பரிய மற்றும் மரபுக்குழுவின் ஒப்புதலோடு சிலை அமைக்கலாம் எனவும் அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
பாரம்பரியக்குழு நாடாளுமன்றத்தின் பராம்பரியத்தன்மையை பராமரிக்க அமைக்கப்பட்ட குழுவாகும். இந்தக் குழு மக்களவைத் தலைவருக்கு கட்டுப்பட்ட அமைப்பாகும்.தற்போது நாடாளுமன்றத்தில் 50 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களின் சிலைகள் மற்றும் உருவப்படங்கள் உள்ளன.
source:dinamani
0 கருத்துகள்: on "நாடாளுமன்றத்தில் இனி புதிய சிலைகள் மற்றும் உருவப் படங்களுக்கு அனுமதி இல்லை"
கருத்துரையிடுக