ஈரான் மீது விதிக்கப்படவுள்ள புதிய பொருளாதார தடைக்கு சீனாவின் ஆதரவைக் கோரியுள்ளது அமெரிக்கா.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தொலைபேசி மூலம் சீன அதிபர் ஹு ஜிண்டாவோவிடம் ஆதரவைக் கோரினார் என்று வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவில் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவும் அதிபர் ஒபாமாவும் சந்தித்துப் பேசினர். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இரு நாட்டுத் தலைவர்களும் தொலைபேசி மூலம் ஆலோசித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இரு தலைவர்களும் வியாழக்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசியில் பேசினர். அப்போது பல்வேறு விவகாரங்களில் தங்களது நாடுகளின் நிலைப்பாடு குறித்து இருவரும் தெளிவுபடுத்திக் கொண்டனர். அமெரிக்காவுடன் நல்லுறவை நீடிக்கவே சீனா விரும்புவதாகவும், திபெத் விவகாரம் நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்டதால் அதில் சமரசத்துக்கு இடமில்லை என்பதையும் ஹு ஜிண்டாவோ உறுதிபடத் தெரிவித்தார்.
இரு நாடுகளும் மிகப் பெரிய பொருளாதார சக்திகளாக உள்ளதாகவும், இதனால் முக்கியமான விஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம் என்பதையும் ஒபாமா தெரிவித்தார் என்று வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: on "ஈரான் மீது பொருளாதார தடை- சீனாவிடம் ஆதரவு கோருகிறது அமெரிக்கா"
கருத்துரையிடுக