பாங்காக்:தாய்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் புதன்கிழமை சுற்றி வளைத்தனர். இதையடுத்து நாடாளுமன்றத்துக்குள் இருந்த துணை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தலைநகர் பாங்காக்கில் அந்நாட்டின் கிராமப்புறத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ரவின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் புதன்கிழமை நாடாளுமன்றத்தை சுற்றுவளைத்து தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்தின் நுழைவுவாயில் இரும்புக் கதவை பெரிய வாகனத்தால் மோதி உடைத்தெறிந்தனர்.
இதையடுத்து அவர்கள் உள்ளே நுழைந்து அமைச்சர்களை தாக்க முயன்றனர். அதற்குள் சுதாரித்த அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் நாடாளுமன்றத்துக்குள் இருந்த துணை பிரதமர் மற்றும் அமைச்சர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டனர்.
போராட்டக்காரர்களின் ஆக்ரோஷமான நடவடிக்கையை அறிந்த பாதுகாப்புப் படையினர் உடனே இரு ஹெலிகாப்டர்களை வரவழைத்து துணை பிரதமரையும், அமைச்சர்களையும் பத்திரமாக மீட்டனர்.
போராட்டக்காரர்கள் அத்துமீறி நாடாளுமன்றத்துக்குள் நுழைவதை அறிந்த சில எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தின் வளாக சுவற்றில் ஏறி குதித்து தப்பித்து ஓடினர். இவ்வாறு ஓடியவர்களையும் போராட்டக்காரர்கள் மடக்கிப்பிடித்து தாக்க முயற்சித்தனர். எனினும் போராட்டக்காரர்களிடம் பிடிபடாமல் எம்.பி.க்கள் தப்பினர்.
போராட்டக்காரர்களின் இந்த நடவடிக்கை அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அபிசித் வெஜ்ஜவா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பாங்காக்கில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார். போராட்டக்காரர்களை நகரைவிட்டு வெளியேறுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் அவர்கள் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து தொடர்ந்து பாங்காக்கிலேயே தங்கியுள்ளனர்.
நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தக்ஷின் சினவத்ரவின் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்து கூட்டத்தை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். எங்களின் இந்த நோக்கம் நிறைவேறிவிட்டது என்றார்.
source:dinamani
0 கருத்துகள்: on "தாய்லாந்து நாடாளுமன்றம் சுற்றிவளைப்பு: அமைச்சர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு"
கருத்துரையிடுக