27 ஏப்., 2010

வேடிக்கையா, வேதனையா?

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை வாங்குவதில் பணம் முதலீடு செய்தவர்களின் பெயர் தெரியாததும், இவர்களது பணம் வந்த வழி சரியாக இல்லாததும் வருமான வரித்துறை சோதனைகளில் தெரியவந்துள்ளது என்பது ஒருபுறம் இருக்க, இந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு கேளிக்கை வரி விதிக்காததால் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் பற்றியும் விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு வரி விதிக்கப்படவில்லை. இதனால் 2008-ம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற 10 கிரிக்கெட் போட்டிகளால் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.4.99 கோடி. இன்னமும்கூட மகாராஷ்டிர மாநில அரசு, இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு வரி விதிக்கவில்லை என்பதும், இதனால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு 2008-ம் ஆண்டை விடக் கூடுதலாகவே இருக்கும் என்பதும் நிச்சயம்.

இந்த இழப்பு பற்றிய விவரம் தலைமைப் பொதுக்கணக்குத் தணிக்கைத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால்தான் தற்போது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு தில்லியில் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் ஏன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு கேளிக்கை வரி விதிக்கவில்லை என்று தலைமைப் பொதுக்கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருப்பதுடன், இதனால் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும் தானே கணக்கிட்டு, தோராயமாக ரூ.4.99 கோடி என்று கூறியுள்ளது.

தோராயமாக என்று குறிப்பிடக் காரணம், 2008-ம் ஆண்டு நடைபெற்ற 10 போட்டிகளை எத்தனை பேர் பார்த்தார்கள், நுழைவுக் கட்டணத்தின் வகைப்பாடு என்ன என்று தணிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு, மகாராஷ்டிர மாநில அரசு பதில் அளிக்கவில்லை. இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையைச் செய்த இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இதே தகவல்களை தணிக்கைத் துறை கேட்டபோது, அந்த நிறுவனம் தந்த பதில், கிரிக்கெட் போட்டிக்கு கேளிக்கை வரி செலுத்தத் தேவையில்லை என்பது மட்டுமே.

கேளிக்கை வரிச் சலுகை இருந்தாலும்கூட, போட்டிகளைப் பார்த்தவர்களுக்கு, எந்தெந்தக் கட்டணத்தில் டிக்கெட் விற்பனை நடந்தது, மொத்தம் எவ்வளவு வசூலானது என்பதை, அரசோ அல்லது தணிக்கைத் துறையோ, வருமானவரித் துறையோ கேட்டால், தராமல் இருக்க முடியுமா? இந்த அளவுக்கு அடாவடித்தனமும், தகவல்களைத் தர மறுக்கும் தைரியமும் உள்ளது என்றால் அதற்குக் காரணம் இவர்களின் பினாமிகளாக அரசியல்வாதிகள் இருப்பதுதானே!

தகவல்கள் மறுக்கப்பட்ட நிலையிலும்கூட தணிக்கைத் துறை அதிகாரிகள், இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற விளையாட்டு அரங்கங்களில் எத்தனை பேர் அமரலாம் என்பதைக் கணக்கிட்டு, கட்டணங்கள் சில நூறு ரூபாயில் தொடங்கி சில ஆயிரம் ரூபாய் வரைக்கும் இருந்தாலும்கூட, ஒரு பார்வையாளருக்கு சராசரியாக ரூ.500 என்று மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் எட்டப்பட்ட இழப்புத்தொகைதான் ரூ.4.99 கோடி. இந்தியா வின் நிறுவனம் உண்மையிலேயே விற்ற டிக்கெட் எண்ணிக்கை மற்றும் கட்டணங்களைக் கணக்கிட்டால் இந்த கேளிக்கை வரி இழப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும்.

2010-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 25-ம் தேதி வரை மொத்தம் 60 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்தப் போட்டிகளை எத்தனை பேர் பார்த்தார்கள், வசூலான கட்டணங்கள் எவ்வளவு என்பதைக் கணக்கிடுவதையும், எந்தெந்த மாநிலங்கள் வரி விலக்கு அளித்தன என்பதையும் ஒட்டுமொத்தமாகத் தலைமைப் பொதுக் கணக்குத் தணிக்கைத் துறை வெளியிடுமானால், பல உண்மைகள் அம்பலமாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு கேளிக்கை வரி விதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. கேளிக்கை வரிச் சட்டத்தில் "விளையாட்டு' என்ற சொல் இடம் பெறவில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் தில்லி மட்டும் எப்படி கேளிக்கை வரி விதித்தது? அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது வரி ஏய்ப்பு செய்வோருக்கு வசதியாகப் போகிறது.

திரைப்பட அரங்க நுழைவுச் சீட்டுகளில்கூட, கட்டணச் சீட்டுகளில் அதன் தொகையோடு, அதில் கேளிக்கை வரியாக அரசுக்குச் செலுத்தப்படும் தொகையும் சிறிய எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும். இந்தக் கேளிக்கை வரி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்புக்கு ஏற்ப மாறுபடுவதையும் காண முடியும். நாளடைவில் இந்த விவரங்கள் அச்சிடுவதைப் பெரும்பாலான திரையரங்குகள் நிறுத்திக் கொண்டன. டிக்கெட்டுகளை வெறும் டோக்கன் போல வழங்கத் தொடங்கி விட்டன. ஆகையால், ஒரு தனிநபர் தான் கொடுக்கும் நுழைவுக் கட்டணத்தில் அரசுக்குப் போய்ச் சேரும் கேளிக்கை வரி எவ்வளவு என்பதே தெரியாமல் போய்விட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்பது மட்டுமல்ல, நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் கலைஇரவு என்றாலும், கட்டணம் வசூலித்தால், அரசின் கேளிக்கை வரி விலக்கு பெறாத நிலையில், அவர்களும் கேளிக்கை வரி செலுத்தியே ஆக வேண்டும். ஆனால் இதையெல்லாம் தொடர்புடைய அரசு அதிகாரிகள் உன்னிப்பாகப் பார்க்கிறார்களா அல்லது திரைத்துறை எப்போதுமே தமிழக முதல்வரின் அன்புக்குப் பாத்திரமானது என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்களா? தெரியவில்லை!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்தில் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்புக்காகவும் ரசிகர்களைக் கட்டுப்படுத்தவும் குவிக்கப்படும் போலீஸôரை மட்டும் கணக்கில் கொண்டாலும் அரசுக்கு நிதிச்செலவு அதிகம்தான். சாலைகள் அமைப்பது என்பது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. அப்படியிருக்க, நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்குக்கூட 100 கி.மீ.க்கு ஒன்று என்று சுங்கம் வசூலிக்கும் அரசு, தனியாரால் வியாபார நோக்குடன் நடத்தப்படும் விளையாட்டான ஐபிஎல்லுக்குக் கேளிக்கை வரியிலிருந்து விதிவிலக்கு அளிக்கிறதே, இது வேடிக்கையா? இல்லை வேதனையா?
dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "வேடிக்கையா, வேதனையா?"

mohamed gani சொன்னது…

galaignar seyvadhaiyum mattra business fraudhal seyvadhaiyum peoples ennaiku sinthithu seyalpadukirargalo annaikuthan tamil nadu munnerum

கருத்துரையிடுக