மக்கள் தொகை கணக்கெடுப்பு-2011 பணியை இந்தியா தொடங்கியுள்ளது. கணக்கெடுப்பின் முதல் நபராக இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. இந்த மிகப்பெரிய பணியில் ஒவ்வோர் இந்தியனும் பங்கேற்கவேண்டும் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் குடியரசுத் தலைவர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பது கருதப்படக் காரணம், முதல் முறையாக தேசிய மக்கள் பதிவேடு உருவாக்கப்படவுள்ளது. இதில் 15 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் விவரங்களும் இருக்கும். கைரேகைப்பதிவும் இருக்கும். மக்கள் கணக்கெடுப்பு என்பது வெறும் வாக்காளர் பட்டியலைப் போன்றது அல்ல. இந்தப் படிவங்கள் எந்த அளவுக்கு விரிவாகவும், துல்லியமாகவும், உண்மையாகவும் பூர்த்தி செய்யப்படுகின்றனவோ அந்த அளவுக்கு இந்தியா தன்னைத்தானே கண்ணாடியில் பார்ப்பதைப் போல பார்த்துக்கொள்ளவும் தன்னைத் திருத்தி மேம்படுத்திக் கொள்ளவும் உதவும்.
2001 கணக்கெடுப்பின்போது இந்தியா இருந்த காலகட்டம் வேறானது. அப்போதுதான் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அனைத்து நகரங்களுக்கும் சென்றடைந்தது. அந்த நேரத்தில்தான் கைபேசிகள் வரத்து தொடங்கியது. கணினிகள் பயன்பாடு அதிகரித்தது. ஆனால், இந்த கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா கண்டுள்ள மாற்றங்கள் அளவிட முடியாதவை. நகர்ப்புறங்களில் கைபேசி இல்லாதவர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தையும் பதிவுசெய்யும் வகையில் தான் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போதைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒவ்வொரு மனிதனின் வாழ்விடம், தொழில், பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதி, கழிவறைவசதி, வீட்டில் உள்ளவர்கள் வைத்திருக்கும் செல்பேசிகள், சமையல் எரிவாயு,டி.வி.,ஃபிரிட்ஜ், கணினிகள், வாகனங்கள், இன்டர்நெட் வசதி, சொந்தவீடா அல்லது வாடகையா என எல்லாத்தகவல்களையும் பதிவுசெய்தாக வேண்டும். இதன் கேள்விகள் பலவாகவும் தனிப்பட்ட விவரங்களைக் கோருவதாகவும் இருந்தாலும்கூட, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் இதை வெளிப்படையாகத் தெரிவித்தால்தான், இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு உதவியாக அமையும் என்பதி சந்தேகமில்லை.
மேலும், சுமார்ரூ.5,000 கோடி செலவில் நடைபெறும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 22லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். 24 கோடி இல்லங்களுக்கு இவர்கள் நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்தப் போகிறார்கள். இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்யவும் கேள்விகளைக் கேட்டு, பதில்களைப் பதிவு செய்யவும் மிகமிக அதிகமான பொறுமை தேவை. தமிழகத்தைப் பொருத்தவரை இத்தகைய அலுவலர்களைப் பணியமர்த்தப் போவது தமிழக அரசுதான். ஆகவே, மக்கள் கணக்கெடுப்பில் ஈடுபட உண்மையான ஆர்வமும், பொறுமையும் உள்ளவர்களை மட்டுமே இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாறாக,வெறுமனே ஒரு வீட்டைக் கணக்கெடுத்தால் ரூ.50 கிடைக்கும் என்று பணத்துக்காக மட்டுமே பணியாற்ற வருபவர்கள் இத்தகைய படிவங்களை அவசர அவசரமாகப் பதிவுசெய்து, பல கேள்விகளை வெற்றிடங்களாகவே விட்டுவிடுவார்கள்.
இத்தகைய நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பொறுப்பான, பொறுமையானவர்களை பணியமர்த்துவதோடு, மாநில அரசின் நலத் திட்டங்கள்எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளன என்பதையும் சேர்த்தே கணக்கெடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இது மாநில அரசு தன்னைத்தானே மதிப்பீடு செய்து கொள்ள உதவும். உதாரணமாக, தமிழக அரசின் இலவச கலர் டிவி, எரிவாயு இணைப்புகள்,முதியோர் ஓய்வூதியம் பெறுவோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரைப் பற்றியும் தனிப்படிவம் மூலம் கண்டறிவது மிகவும் எளிது.
15-வது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கிடையாது என்பதை தெளிவாகத் தெரிவித்துள்ள அரசு, ஆண், பெண் இருபாலினம் மட்டுமன்றி மூன்றாம் பாலாக திருநங்கை என்கிற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவில்லை. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, படிவத்தில் மூன்றாம் பாலினரையும் சேர்த்தால் தவறில்லை. குடிசைகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இடம்பெற்று விடுகிறார்கள்.
ஆனால்,நகரத்தின் சாலையோரங்களில் வானமே கூரையாகக் கொண்டு வாழும் நடைபாதை வாசிகளும் பஞ்சைப் பராரிகளும் இத்தகைய கணக்கெடுப்பில் இடம்பெறாமலேயே போய் விடுகிறார்கள். இவர்கள் அரசின் பார்வையிலும் சமுதாயத்தின் பார்வையிலும் விடுபட்டுப்போவது ஒரு முறையான ஆட்சியின் லட்சணமாக இருக்காது. நடைபாதை வாழ்மக்களும் கணக்கெடுக்கப்பட்டால் தான் இந்த 15-வது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சிறப்புடையதாக அமையும்.
source:தினமணி தலையங்கம்
0 கருத்துகள்: on "மக்கள் தொகை கணக்கெடுப்பு - நல்லதொரு வாய்ப்பு"
கருத்துரையிடுக