கவிழ்ந்த ரெயிலின் 13 பெட்டிகளின் மீது எதிரே வந்த சரக்கு ரெயில் மோதியதில் விபத்தின் சேதம் அதிகரித்தது. 150க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. மரண எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஹவ்ரா-குர்ளா லோக்மான்யதிலக் ஞானேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரெயில்தான் விபத்திற்கிடையானது. இன்று(28/05/2010) அதிகாலை 1.30 மணியளவில் மித்னாபூர் மாவட்டம் ஜர்க்ராம் என்ற இடத்தில் கெம்சோலி-சர்தியா ரெயில் நிலையங்களுக்கிடையேத் தான் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தின் ஃபிஷ் ப்ளேட்டுகளை அகற்றியிருந்தது கண்டறியப்பட்டதாக ஐ.ஜி.சுரோஜித் தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் பொறுப்பை பி.சி.பி.ஐ(போலீஸ் அடக்குமுறைக்கெதிரான பொதுமக்கள் எதிர்ப்புக்குழு) யின் இரண்டு போஸ்டர்கள் சம்பவ இடத்தில் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
ஜங்கல் மஹலில்(மேற்கு மிட்னாபூர், புரூலியா, பன்குரா) ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையினரை வாபஸ் பெறவும், சி.பி.எம்மின் அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டுவரவும் தாங்கள் வேண்டுகோள் விடுத்தபோதிலும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.
மாவோவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் நடத்திய தாக்குதல்தான் இது என சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வேத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
விபத்து நடந்த பகுதியிலிருந்து டி.என்.டி வெடிப்பொருட்களும், ஜெலட்டின் குச்சிகளும் கண்டெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளையில் இந்த ரெயில் விபத்து தாக்குதல்தான் என்று கருதப்படுவதாகவும், ஆனால் வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது தெளிவாகவில்லை என்றும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் தெரிவித்தார்.
விமானப்படையினரின் உதவியுடன் விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நடைபெறுவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்புதான் பாட்ரோல் எஞ்சின் கடந்துச் சென்றதாக மம்தா தெரிவித்தார்.
விபத்தில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், மரணித்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரெயில்வேயில் வேலையும் வழங்கப்படும் என ரெயில்வேத்துறை அறிவித்துள்ளது.
விபத்திற்கிடையான ரெயிலில் 24 பெட்டிகள் இருந்தன. ரெயில் தாக்குதலில் கவிழ்ந்தபொழுது 10 ஸ்லீப்பர் கோச்சுகள் உள்பட 13 பெட்டிகள் கவிழ்ந்தன. இதில் அடுத்த தண்டவாளத்தில் கவிழ்ந்துக்கிடந்த 5 பெட்டிகள் மீதுதான் எதிரே வந்த சரக்கு ரெயில் மோதியது.
விபத்தில் மரணித்தவர்களுக்கு 3லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் காயமடைந்தவர்களுக்கு சிகிட்சைக்கான செலவும் அரசு ஏற்றுள்ளதாக மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.
மாநில நிதியமைச்சர் அஸீம் தாஸ்குப்தா சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். தாக்குதல் நடந்த இடம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமான பகுதி என மேற்குவங்காள தலைமைச் செயலாளர் சென் தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன்சிங்கும், சீனாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஜனாதிபதி பிரதீபா பாட்டீலும் இச்சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர். மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும் பிரதமர் நிதியுதவியாக அறிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மேற்குவங்காளத்தில் கவிழ்ந்த ரயில் மீது மோதிய சரக்கு ரெயில்- 71 பேர் பரிதாப மரணம்- நக்ஸல்களின் சதிச்செயலா?"
கருத்துரையிடுக