புதுடெல்லி:2008 நவம்பரில் மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அஜ்மல் கஸாப் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
அதேவேளையில், இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட இந்தியாவைச் சார்ந்த ஃபஹீம் அன்சாரி, ஸபாஉத்தீன் அஹ்மத் ஆகியோருக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.
கஸாபிற்கெதிராக சுமத்தப்பட்ட 86 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தண்டனைக் குறித்த தீர்ப்பு நாளை அளிக்கப்படும்.
கர்கரேவைக் கொன்றது யார்?
மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலஸ்கர் ஆகிய அதிகாரிகளை யார் சுட்டுக் கொன்றது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
அதேசமயம், இன்னொரு முக்கிய காவல்துறை அதிகாரியான அசோக் காம்தேவை அபு இஸ்மாயில் சுட்டுக் கொன்றதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்தியர்கள் குறித்த விசாரணை சரியில்லை
நீதிபதி அளித்த தீர்ப்பின்போது, இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகிய இருவரின் பங்கு குறித்து அரசுத் தரப்பில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து நீதிபதி கூறுகையில், அன்சாரியிடம் மும்பை குறித்த வரைபடம் கைப்பற்றப்பட்டதாக அரசுத் தரப்பில் தாக்கல் செய்த ஆதாரம் சரியில்லை. அன்சாரி வைத்திருந்த மேப்பை விட கூகுள் தளத்திற்குப் போனால் மிக சிறந்த மேப்பை பெற முடியும். தீவிரவாத தாக்குதலை நடத்தும் ஒருவர், இவ்வளவு மோசமான மேப்பை வைத்துக் கொண்டுதான் செய்வார் என்று அரசுத் தரப்பு கூறியது நம்பும்படியாக இல்லை.மேலும், அந்த வரைபடத்தில் ரத்தக்கறை எதுவும் இல்லை என்றும் கூறிய நீதிபதி, இரு இந்தியர்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாக தெரிவித்தார்.
உண்மையின் பக்கம் வாதிட்ட ஆஸ்மி
ஃபஹீம் அன்சாரிக்காகத் தான் கொல்லப்பட்ட மனித உரிமைப்போராளி ஷாஹித் ஆஸ்மி வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஃபஹீம் அன்சாரி நிரபராதி என நீதிமன்றம் கூறியுள்ளதற்கு ஷாஹித் ஆஸ்மி உண்மையின் பக்கம் நின்று வாதிட்டதே காரணமாகும்.
தீர்ப்புக்குப் பின்னர் பஹீம் அன்சாரியின் தற்போதைய வழக்கறிஞர் ராஜேந்திர மொகாஷி செய்தியாளர்களிடம் பேசுகையில்; 'அரசுத் தரப்பில் முன் வைக்கப்பட்ட வரைபட ஆதாரத்தை நீதிபதி நிராகரித்து விட்டார். கொல்லப்பட்ட தீவிரவாதி அபு இஸ்மாயிலின் சட்டைப் பையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வரைபடத்தை அன்சாரிதான் கொடுத்தார் என்பது அரசுத் தரப்பு குற்றச்சாட்டு. ஆனால் அது ஏற்கும்படியாக இல்லை என்று நீதிபதி கூறி விட்டார். எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தோம். அதேபோல நடந்துள்ளது என்றார்.
இந்த வழக்கு 369 நாட்கள் விசாரிக்கப்பட்டது. 658 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 12850 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
0 கருத்துகள்: on "மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கு:கஸாப் குற்றவாளி, ஃபாஹிம் அன்சாரி, ஸபாஉத்தீன் அஹ்மத் நிரபராதிகள் என தீர்ப்பு"
கருத்துரையிடுக