21 மே, 2010

ஆயுதக் கொள்முதல் தொடர்பான கடற்படையின் ரகசியத் தகவல் கசிவு -முக்கியக் குற்றவாளி கைது

இந்தியக் கடற்படையின் ஆயுதக் கொள்முதல் தொடர்பான முக்கிய தகவல்களை சில குறிப்பிட்ட ஆயுத வியாபாரிகளுக்கு கொடுத்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான ரவிசங்கரன் லண்டனில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரவிசங்கரன், முன்னாள் கடற்படைத் தலைமைத் தளபதி அருண் பிரகாஷின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 12ம் தேதி லண்டன் போலீஸாரால் ரவிசங்கரன் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் ஜாமீன் அளித்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு ரவிசங்கரனுக்கு எதிராக இன்டர்போல் போலீஸார் ரெட் கார்னர் அறிவிக்கையை வெளியிட்டனர். இதையடுத்து கடந்த நான்கு வருடங்களாக ரவிசங்கரன் தேடப்பட்டு வந்தார்.

கடந்த 2006ம் ஆண்டு ரவிசங்கரன் ஒரு தலைமறைவுக் குற்றவாளி என டெல்லி கோர்ட் பிரகடனம் செய்தது. அவரைக் கைது செய்து அனுப்புமாறு கோரி மத்திய அரசு இங்கிலாந்து கோர்ட்டையும் அணுகியது. இருப்பினும் லண்டன் போலீஸ் பிடியிலிருந்து தப்பிய ரவிசங்கரன், பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க் என ஓடிக் கொண்டிருந்தார்.

கடற்படை ரகசிய கசிவு வழக்கில் இதுவரை நான்கு கடற்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து அப்போது கடற்படைத் தளபதியாக இருந்த அருண் பிரகாஷ் பதவி விலக முன்வந்தார். ஆனால் அதை மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் - ஓய்வு பெற்ற இந்திய விமான்படை விங் கமாண்டர் எஸ்.எல்.சுர்வே, ஓய்வு பெற்ற கடற்படை கமாண்டர் குல்புஷன் பராஷார், டிஸ்மிஸ் செய்யப்பட்ட கடற்படை கமாண்டர்கள் விஜேந்தர் ராணா, வி.கே.ஜா ஆகியோர் ஆவர்.
2006ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி சுர்வே, ரவிசங்கரன், ஜா, ராணா மற்றும் ராஜ் ராணி ஜெய்ஸ்வால், முகேஷ் பஜாஜ், ஓய்வு பெற்ற விங் கமாண்டர் கோஹ்லி, காஷ்யப் குமார், குல்புஷன் பராஷார் ஆகியோர் மீது அலுவலக ரகசியக் காப்புச் சட்டம், இந்திய குற்றவியல் சட்டத்தின் 120-பி ஆகியவற்றின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

தற்போது கைதாகியுள்ள ரவிசங்கரனை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் சிபிஐ இறங்கியுள்ளது. இதற்கு பல வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆயுதக் கொள்முதல் தொடர்பான கடற்படையின் ரகசியத் தகவல் கசிவு -முக்கியக் குற்றவாளி கைது"

கருத்துரையிடுக