2 மே, 2010

வாணியம்பபடி தோல் பதனிடும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஐவர் பலி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருக்கும் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமையன்று நச்சுவாயு தாக்கி ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

இதன் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் நிலவும் பாதுகாப்பு தன்மைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ஒரு தொழிற்சாலையில் இருக்கும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் நச்சு வாயு தாக்கியதால் மூச்சடைத்து உயிரிழந்துள்ளனர்.

ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் ராணிப்பேட்டை பகுதியில் பெருமளவிலான தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்புகள் குறித்து பலதரப்பிலிருந்து பல ஆண்டுகாலமாக கவலைகள் வெளியிடப்பட்டு வந்தன.

எனினும் வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட விபத்துக்கு குறிப்பிட்ட தொழிற்சாலை நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளை மீறி செயற்பட்டதே காரணம் என்று அகில இந்திய தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அமைப்பின் தலைவரான ரஃபீக் அகமது தெரிவித்தார்.

அப்பகுதியில் இருக்கும் அனைத்து தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டிருப்பதாகவும், இதை கவனத்தில் எடுக்காத காரணத்தினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

இது போன்ற விபத்துக்கள் இனி நடைபெறாமல் இருப்பதற்காக, வல்லுநர்கள் பங்கு பெறும் உயர்மட்டக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை கூடி விவாதிக்கவுள்ளது என்றும் ரஃபீக் அகமது கூறுகிறார்.

வேலூர் பகுதியில் இருக்கும் தோல் பதனிடும் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் தொழிலாளர்களின் நலன்களை பேணுவதில்லை என்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பது முற்றிலும் ஏற்புடையது அல்ல என்றும் அவர் கூறுகிறார். எனினும் சில குறைபாடுகள் இருப்பதையும் ரஃபீக் அகமது ஒப்புக் கொள்கிறார்.

தோல் பதனிடும் மற்றும் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகள் பெருமளவில் இலாபம் ஈட்டுபவையாக இருந்தாலும் அப்படியான தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் சரியான முறையில் கவனிக்கப்படுவதில்லை என்கிற விமர்சனம் தொடர்ந்து இருந்து வருகிறது என்று தொழிலாளர் நல அமைப்புகள் கூறுகின்றன.
source:பி.பி.சி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வாணியம்பபடி தோல் பதனிடும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஐவர் பலி"

கருத்துரையிடுக