புதுடெல்லி:உடல் தளர்ந்துபோய் வெள்ளை குர்தாவும், பைஜாமாவும் தொப்பியுமணிந்து தாடி வைத்திருந்த 50 வயது தேவ்பந்த் மார்க்க அறிஞரான நூருல் ஹுதா திஹார் சிறையிலை விட்டு வெளியே வந்தார்.
"நான் செய்த தவறு என்ன?" என்று தான் ஒரு போலீஸ்காரரிடம் கேட்டபொழுது அவர்; 'தாடியுடன் கூடிய உங்கள் தோற்றம்தான் சிறையிலடைக்க காரணம்’ என்று தெரிவித்ததாக கூறுகிறார் 60 மணிநேரம் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு வெளியே வந்த நூருல் ஹுதா.
'15-20 மினட் மெ ஜஹாஸ் உட்னேவாலா ஹை' (15-20 நிமிடத்தில் விமானம் புறப்படும்) என்று நூருல் ஹுதா தனது மகன் ஃபஸ்லுல்லா நூரிடம் மொபைல் போனில் அழைத்துக் கூறியதுதான் அவர் செய்த தவறு.
’15-20 நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறப் போகிறது (15-20 மினட் மெ ஜஹாஸ் உடானே வாலா ஹை) என்று விமான இருக்கையின் அருகிலிருந்த பெண்மணி தவறாக புரிந்துக் கொண்டார். உடனே விமானப் பணியாளர்களிடம் கூறி போலீஸை அழைத்து நூருல் ஹுதா கைது செய்யப்பட்டு பின்னர் சிறையிலடைக்கப்பட்டார்.
மதரஸா என்றால் என்ன?, தேவ்பந்த் எங்கே உள்ளது? உள்ளிட்ட விசித்திரமான கேள்விகளை போலீசார் கேட்டதாக கூறுகிறார் நூருல் ஹுதா.
"இஸ்லாம் சமதானத்தையும், நல்லிணக்கத்தையும் போதிக்கும் மார்க்கம். நான் இஸ்லாத்தை போதிக்கும் ஒரு ஆசிரியர். இதற்கு மாற்றமான செயல் குறித்து என்னால் சிந்திக்க கூட இயலாது" என்று நூருல் ஹுதா தெரிவிக்கிறார்.
தந்தையை சிறையில் காணவந்த மகன் ஃபஸ்லுல்லாவையும் போலீஸ் விசாரித்தது. 'எதிர்கால திட்டங்கள் என்ன?' என்பதுதான் ஃபஸ்லுல்லாவிடம் போலீஸார் கேட்ட கேள்வி.
நூருல் ஹுதா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சம்பவம் விவாதத்தை கிளப்பியது. பின்னர் இதில் உள்துறை அமைச்சகம் தலையிட்ட சூழலில் வழக்கை வாபஸ் பெற்று தலைத் தப்புவதற்கு முயற்சிக்கிறது போலீஸ். வழக்கை முடிவுக்கு கொண்டுவர கோரி டெல்லி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக நூருல் ஹுதாவிற்கெதிராக வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "'நீங்கள் வைத்திருந்த தாடிதான் உங்களை சிறையிலடைப்பதற்கு காரணம்' -தேவ்பந்த் மார்க்க அறிஞரிடம் கூறிய போலீஸ்காரர்"
கருத்துரையிடுக