17 மே, 2010

தாய்லாந்தில் செஞ்சட்டை கிளர்ச்சியாளர்களின் தலைவர் கத்தியா சவாஸ்திபோல் சுட்டுக் கொலை

தாய்லாந்து நாட்டில் பிரதமர் அபிசித் வெஜ்ஜஜீவா தலைமையிலான கூட்டணி அரசு பதவி விலக வேண்டும் என்று கோரி கடந்த 2 மாதங்களாக தலைநகர் பாங்காக்கில் செஞ்சட்டை அணிந்த கிளர்ச்சியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கும் ராணுவம், போலீசாருக்கும் இடையே அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் இதுவரை 43 பேர் இறந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.ஆனால், கிளர்ச்சி படிப்படியாக வேகம் பெற்று வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மர்மமான முறையில் சுடப்பட்ட போராட்டக்காரர்களின் தலைவர் கத்தியா சவாஸ்திபோல் இன்று மரணமடைந்தார்.
அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தலைமை வகித்து வந்த கத்தியா சவாஸ்திபோல் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார்.

கத்தியா சவாஸ்திபோல் கொலை செய்யப்பட்டதையடுத்து தாய்லாந்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் மேலும் தீவிரமாகி வன்முறைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து இன்று நாடு முழுவதும் விடுமுறையை அறிவித்துள்ளது அந் நாட்டு அரசு.

தாய்லாந்து நாட்டில் தட்சின் சினவத்ரா பிரதமராக ஆட்சி செய்துவந்தார். நீதிமன்றத் தலையீடு காரணமாக அவர் பதவி விலக நேர்ந்தது. அவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதையடுத்து பிரதமராக அபிசித் வெஜ்ஜஜீவா பதவியேற்றார். ஆனால் தாய்லாந்து நாட்டின் கிராமப் பகுதிகளில் தட்சின் சினவத்ராவுக்கு ஆதரவு அதிகம். எனவே கிராமவாசிகள் அவரை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி மார்ச் 12 முதல் தலைநகர் பாங்காக்கில் குவிந்து கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதில் கணிசமானவர்கள் பெண்கள், குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்சின் கம்யூனிஸ ஆதரவாளர் என்பதால் அவருக்கு எதிராகவும் பிரதமர் அபிசித் வெஜ்ஜஜீவாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவும் ஜப்பானும் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த நாட்டு தூதரகங்களுக்கு எதிராகவும் கிளர்ச்சியாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் தான் போராட்டத்துக்கு தலைமை வகித்த மூத்த தலைவரான கத்தியா சவாஸ்திபோல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அந்நாட்டில் கலவரம் மேலும் அதிகரித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தாய்லாந்தில் செஞ்சட்டை கிளர்ச்சியாளர்களின் தலைவர் கத்தியா சவாஸ்திபோல் சுட்டுக் கொலை"

கருத்துரையிடுக