
62 வயதாகும் அனுராதா ரமணன், தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். புதுமைக் கண்ணோட்டத்துடன் கூடிய, முற்போக்குச் சிந்தனைகளுடன் கூடிய எழுத்தைத் தந்தவர் அனுராதா.
சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஆகியவற்றை படைத்துள்ளார்.
சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகியவை திரைப்படங்களாக உருவெடுத்து வெற்றியும் பெற்றன.
பாசம், புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்டவை தொலைக்காட்சி நாடகங்களாக மாறி புகழ் பெற்றவையாகும்.
1978-ம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது பெற்றார்.
அனுராதா ரமணன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அடிக்கடி பரிசோதனை செய்து வந்தார்.
கடந்த 5-ந் தேதியும் வழக்கமான பரிசோதனைக்காக சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று உடல் நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் மாலை நாலரை மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மரணமடைந்தார். அதன் பின்னர் அனுராதாவின் உடல் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சொந்த ஊராகக் கொண்ட அனுராதாவுக்கு சுபா, சுதா என இரு மகள்களும், பேரன், பேத்திகளும் உள்ளனர்.
அனுராதா ரமணனின் மரணத்திற்கு எழுத்துலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
thatstamil
0 கருத்துகள்: on "பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மரணம்"
கருத்துரையிடுக