அகமதாபாத்:தாழ்த்தப்பட்ட மக்களையும் மனநலம் குன்றியவர்களையும் ஒப்பிட்டுப் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் நரேந்திர மோடி எழுதிய சமாஜிக் சம்ரஸ்தா என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் பேசிய மோடி,
மனநலம் குன்றிய குழந்தைகள் உள்ளவர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது நாம் அந்தக் குழந்தைகளை எப்படி கவனித்துக் கொள்வோமோ அதே போல தாழ்த்தப்பட்ட மக்களையும் நாம் நடத்த வேண்டும் என்றார்.
மோடியின் இந்தப் பேச்சு நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.காங்கிரஸ் எம்பியான பிரவீன் ராஷ்ட்ரபால் ராஜ்யசபாவில் இந்தப் பிரச்சனையைக் கிளப்பி பேசுகையில், தலித்கள் குறித்த தனது எண்ணத்தை இந்தப் பேச்சு மூலம் நரேந்திர மோடி வெளிப்படுத்திவிட்டார். இது டாக்டர் அம்பேத்கரையே அவமானப்படுத்தியது போலாகும் என்றார்.
மக்களவையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் எம்பியான புனியா கிளப்பினார். அவர் பேசுகையில், நரேந்திர மோடியின் புத்தகத்தில் தலிக்களுக்கு விரோதமான ஏராளமான கருத்துக்கள் உள்ளன. இதனால் நரேந்திர மோடியைப் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.
ராஜ்யசபா இருமுறை ஒத்திவைப்பு:
முன்னதாக மோடியின் பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி பிரவீன் ராஷ்ட்ரபால் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரியிடம் நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் விவாதம் நடத்த ஹமீத் அன்சாரி அனுமதி மறுத்தார்.
ஆனாலும் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி பிரவீன் பிரச்சனை கிளப்பினார். அவருக்கு ஆதரவாக ஜெயந்தி நடராஜன், ஜே.டி.சீலம், ஈஸ்வர் சிங், எம்.ஏ.கான் உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.
மேலும் பிரவீனும் சில காங்கிரஸ் உறுப்பினர்களும் சபையின் மையப் பகுதிக்கு சென்று, நரேந்திர மோடிக்கு எதிராக பிரச்சனை கிளப்ப அனுமதிக்க வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டனர்.
அம்பேத்காரையும், தலித்துகளையும் நரேந்திர மோடி அவமதித்து விட்டதாக குரல் எழுப்பினார். இந்த அமளியின் காரணமாக அவை ஒத்தி வைக்கப்பட்டது.
பி்ன்னர் மீண்டும் அவை கூடியதும் பிரவீன் உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மீண்டும் அவையின் மையப் பகுதிக்கு சென்று நரேந்திர மோடி பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
இதற்கு எதிராக பாஜக எம்பிக்கள் குரல் தந்ததால் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் வெளியே வந்த பிரவீன் நிருபர்களிடம் பேசுகையில், நரேந்திர மோடியை பற்றி உலகத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும். ஏப்ரல் 26ம் தேதி நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அம்பேத்கார் புரட்சியாளர் அல்ல என்று கூறியதோடு, தலித்துகளை மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுடனும் ஒப்பிட்டார். இந்த பிரச்சனையை திங்கள்கிழமை மீண்டும் அவையில் கிளப்புவேன் என்றார்.
குஜராத் அரசு மறுப்பு:
இந் நிலையில் தலித்துகளை மோடி தவறாகப் பேசவில்லை என்று குஜராத் மாநில செய்தித் தொடர்பாளர் ஜெய் நாராயண் வியாஸ் கூறியுள்ளார்.ஆனால், இந்த விவகாரம் குறித்து நரேந்திர மோடி நேரடியாக இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
thatstamil
0 கருத்துகள்: on "தாழ்த்தப்பட்ட மக்களையும் மனநலம் குன்றியவர்களையும் ஒப்பிட்டுப் பேசிய நரேந்திர மோடி?!"
கருத்துரையிடுக