8 மே, 2010

மாவோயிச ஆதரவு மாணவியை விவாதத்துக்கு அழைத்த சிதம்பரம்

புதுடெல்லி:உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வரும்படியும் அங்கு தேநீர் அருந்தியபடி பிரச்னைகளை விவாதிக்கலாம் என்றும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆதரவு மாணவி ஒருவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அழைப்பு விடுத்தார். புதுடெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் "நக்ஸல் இயக்கங்கள்: ஜனநாயகத்துக்கும் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும் பெரிய அச்சுறுத்தல்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கருத்தரங்கை காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பு (என்.எஸ்.யு.ஐ) ஏற்பாடு செய்திருந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த விபா என்ற மாணவி திடீரென எழுந்து "திரு.சிதம்பரம் அவர்களே, எங்களது கருத்தை வெளிப்படுத்த கருத்து சுதந்திரம் வேண்டும். மக்கள் விரோத கொள்கைகளை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது" என கூச்சலிட்டார். அவர் மாவோயிச கருத்துக்களை ஆதரிக்கும் மாணவி ஆவார்.

விபா ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பாடத்தில் ஆய்வு மாணவி. விபாவுக்கு ஆதரவாக மற்றொரு மாணவியும் குரல் கொடுத்தார்.

எதிர்பாராத விதமாக மாணவி விபா இப்படி நடந்து கொண்டது போலீஸாருக்கும்,கருத்தரங்கை ஏற்பாடு தெய்த என்.எஸ்.ஐ.யு. நிர்வாகிகளுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அந்த மாணவியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். எனினும் அவர் தொடர்ந்து கூச்சலிட்டார்.

இந்த சம்பவங்களை மேடையில் இருந்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கவனித்து விட்டார். உடனே சைகையில் விபாவையும் மற்றொரு மாணவியையும் அவர் முன் இருக்கைக்கு வந்து அமருமாறு அழைத்தார்.

"கூச்சலிடும் பெண் யார்? தயவு செய்து முன் பக்கம் உள்ள இருக்கையில் வந்து அமருங்கள். எதை நீங்கள் மக்கள் விரோத கொள்கைகள் என்கிறீர்கள்? என் அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு தேநீர் அருந்திய படி நிதானமாக விவாதிக்கலாம்" என்று அந்த மாணவிக்கு அழைப்பு விடுத்தார் சிதம்பரம்.

எனினும் இதை கண்டு கொள்ளாத பெண் காவலர்கள், அந்த இரு மாணவிகளையும் அரங்கத்தை விட்டு வெளியேற்ற முயற்சி செய்தனர். இதைப்பார்த்த அமைச்சர் கடும் கோபம் அடைந்தார். "ஏன் அந்த மாணவிகளைப் பிடித்து வெளியே தள்ள முயற்சிக்கிறீர்கள்? அவர்களை விட்டுவிடுங்கள். வெளியே அனுப்ப வேண்டாம்" என கோபமான குரலில் சிதம்பரம் பெண் போலீஸாரிடம் கூறினார்.

வழக்கமாக வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் சிதம்பரம் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு ஊதா நிற சட்டையும் காக்கி நிற பேண்ட்டும் அணிந்து வந்திருந்தார்.
source:dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மாவோயிச ஆதரவு மாணவியை விவாதத்துக்கு அழைத்த சிதம்பரம்"

கருத்துரையிடுக