14 மே, 2010

மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஜாதிவாரியாக நடத்த வேண்டும்- மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஜாதிவாரியாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்படடவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் ஜாதிவாரியாக மக்கள் தொகை விவரம் தேவை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில் இப்போது நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ஆனால், அதில் ஜாதிவாரியாக மக்களின் விவரத்தை அறிய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த விஷயத்தில் மத்திய அரசை திமுக, பாமக, லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் போன்றவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த விஷயம் மக்களவையில் விவாதத்துக்கு வந்தபோது அதை பாஜக மறைமுகமாக எதிர்த்தது.

இந்நிலையில் ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக் கோரி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை தாற்காலிக தலைமை நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட விடுமுறை கால டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், இந்தியா முழுவதும் 1931ம் ஆண்டு ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்பிறகு, ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படவில்லை. இப்போதும் 1931ம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை இப்போது பலமடங்கு அதிகரித்திருக்கக் கூடும். எனவே, ஒடுக்கப்பட்டவர்கள் சமூக நீதியைப் பெற ஏதுவாக ஜாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

இதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசும், மக்கள் தொகைக் கண்காணிப்பு ஆணையரும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இப்போது மனுதாரரும் இதே கோரிக்கையை வலியுறுத்துகிறார். எனவே, அவரது கோரிக்கை ஏற்கப்படுகிறது.

ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசும், மக்கள் தொகைக் கண்காணிப்பு ஆணையரும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு
இதற்கிடையே உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.ஆனால் இதிலும் கிர்மிலேயர் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சாசன சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே. பாலகிருஷ்ணன் அடங்கிய 5 நீதிபதிகள் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில், வரையறுக்கப்பட்ட பகுதிகளில் 50 சதவீதத்துக்கு மிகாமல் இடஒதுக்கீடு அளிக்கலாம்.

ஜனநாயகத்தை பரவலாக்குவது என்பது நிர்வாகத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது மட்டும் அல்ல, சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்களையும் அதில் பங்கேற்கச் செய்வதையும் குறிக்கும் என்று கூறியுள்ளனர்.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஜாதிவாரியாக நடத்த வேண்டும்- மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு"

கருத்துரையிடுக