26 மே, 2010

மும்பை தாக்குதல் சந்தேகநபர் விடுவிப்பு

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூலகாரணம் எனக் கருதப்படும் ஜமாத்-உத்-தஃவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் முகமது சயீத்தை வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று தள்ளுபடி செய்திருக்கிறது.
மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொயிபாதான் காரணம் என்றும், அதன் முகப்பு அமைப்பாக செயல்படுவது ஜமாத் உத் தவா என்றும் இந்தியா தரப்பில் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்புக் கவுன்சிலும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதையடுத்து, ஜமாத் உத் தவா தலைவர் ஹஃபீஸ் சயீத்தை 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அரசு வீட்டுக் காவலில் வைத்தது. அதை எதிர்த்து, லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஹபீஸ் சயீத்.

அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பஞ்சாப் மாநில அரசும், பாகிஸ்தானின் மத்திய அரசும் ஹபீஸ் சயீத்தை தொடர்ந்து காவலில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக போதிய சாட்சியங்களை அளிக்கத் தவறிய நிலையில், அவரை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தது.

அதே நேரத்தில், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் நெருக்குதலைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் அரசும், பஞ்சாப் மாநில அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

தாக்குதலுக்கு இலக்கான ஹோட்டல் இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு, வழக்கறிஞர்களை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தாமதமாகி வந்தது. சயீத்துக்கு எதிராக செயல்பட இந்தியா போதிய ஆவணங்களைக் கொடுக்கவில்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியும், உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கும் கூறி வந்தார்கள் ஆனால், போதிய ஆவணங்களை பாகிஸ்தான்வசம் கொடுத்திருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

ஏமாற்றம்
இந்த நிலையில்,பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாணைக்கு வந்தபோது, அவற்றை நீதிமன்றம் நிராகரித்தது. ஹஃபீஸை விடுதலை செய்ய லாகூர் உயர்நீதிமன்றம் பிற்ப்பித்த உத்தரவு செல்லும் என்று அறிவித்தது. அதையடுத்து, ஹஃபீஸ் சயீத் தொடர்ந்து சுதந்திரமாக நடமாட முடியும்.

இந்நிலையில்,பாகிஸ்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்புக் ஏமாற்றமளிப்பதாக இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
source:BBC

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மும்பை தாக்குதல் சந்தேகநபர் விடுவிப்பு"

கருத்துரையிடுக