புதுடெல்லி:மேற்குவங்காளத்தில் மாவோயிஸ்டுகளால் நடத்தப்பட்டதாக கூறும் ரயில் கவிழ்ப்பு தாக்குதலில் தங்களுக்கு எவ்வித பங்கும் இல்லை என மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் ரயில் கவிழ்ப்பிற்கு காரணம் யார் என்பது குறித்த குழப்பம் அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் உண்மை நிலையை கண்டறிய மனித உரிமை ஆர்வலர்களும், அமைப்புகளும் களமிறங்கியுள்ளனர்.
சி.பி.ஐ(மாவோ)யின் மூன்று மாநிலத்தலைவர்கள் தங்களுக்கு ரயில் கவிழ்ப்புத் தாக்குதலில் எவ்வித பங்குமில்லை என்று கூறியதாக மத்திய அரசால் நக்ஸலைட்டுகளுடன் பேச்சுவார்த்தைக்காக நியமிக்கப்பட்ட சுவாமி அக்னிவேஷ் கூறுகிறார்.
இந்த அக்கிரம சம்பவத்திற்கு பின்னணியில் செயல்பட்ட சக்திகளை வெளிக்கொணர சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என அக்னிவேஷ் கோரியுள்ளார்.
ஞானேஷ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு 148 பேர் மரணத்திற்கு காரணமான சம்பவத்தை மாவோயிஸ்டுகளும் கண்டித்துள்ளனர். இச்சம்பவத்துடன் எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாததால்தான் நாங்கள் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வலுவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பீப்பிள்ஸ் யூனியன் சிவில் லிபர்டீஸ் என்ற மனித உரிமை அமைப்பு கோரியுள்ளது.
செய்தி:மாத்யமம்
0 கருத்துகள்: on "இரயில் மீது தாக்குதல்:நாங்கள் காரணமில்லை- மாவோயிஸ்டுகள்"
கருத்துரையிடுக