14 மே, 2010

பணத்திற்காக மதக்கலவரம் நடத்த தயார் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பேசிய வீடியோவை வெளியிட்டது தெஹல்கா

பணத்திற்காக எந்தவிதமான மதக் கலவரத்தையும் நடத்தத் தயாராக இருப்பதாக ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் மாலிக் கூறியதை ரகசியக் கேமரா மூலம் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெஹல்கா.

கிட்டத்தட்ட ஒரு கூலிப்படைத் தலைவனைப் போல அதில் பேசியுள்ளார் முத்தாலிக்.

47 வயதான முத்தாலிக் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ஹக்கேரியில் பிறந்தவர்.1975ம் ஆண்டு 13 வயதாக இருந்தபோது ஆர்எஸ்எஸ் ல் இணைந்தார்.2004ம் ஆண்டு பஜ்ரங் தளத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அரசியலில் நுழையத் துடித்த அவரை பாஜக தேர்தலில் புறக்கணித்து விட்டது. இதனால் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஜ்ரங் தளத்தை விட்டு வெளியேறினார் முத்தலிக்.

பின்னர் கர்நாடக மாநில சிவசேனா தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் அதிலிருந்தும் விலகினார். பின்னர் 2006ம் ஆண்டு ராஷ்டிரிய இந்து சேனா என்ற அமைப்பைத் தொடங்கினார்.

கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் மதரீதியான பதட்டத்தை ஏற்படுத்தினார். இவர் மீது மத கலவரங்களை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடகத்தின் 11 மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் 3 மாவட்டங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் மங்களூரில் பள்ளிவாசலில் பன்றி இறைச்சியை வீசி அதன் மூலம் கலவரத்தை உருவாக்கியதில் இவருடைய அமைப்பும் ஒன்று.

இந்நிலையில் தான் 2008ம் ஆண்டு ஸ்ரீராம் சேனாவைத் தொடங்கினார். மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை ரோட்டில் உடைகள் கிழியக் கிழிய அடித்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது ஸ்ரீராம் சேனா. இதையடுத்து இவருக்கு ஜட்டிகள் அனுப்பி பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இந்நிலையில் ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறையை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கூறி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் முத்தாலிக்.

இவரை அம்பலப்படுத்தியிருப்பது தெஹல்கா பத்திரிக்கையும், இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும்.

பெங்களூர் அல்லது மங்களூரில் கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் ஆட்களை திரட்டித் தருவதாக முத்தாலிக்கும், அவரது அமைப்பின் தலைவர்களான பிரசாத் அட்டவார், பவானி ஆகியோரும் பேசியதை ரகசிய வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளன தெஹல்காவும், ஹெட்லைன்ஸ் டுடேவும்.

இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்த கண்காட்சியை நடத்தப் போவதாகவும், அதற்கு நல்ல பப்ளிசிட்டியை தேடித் தருமாறும் கூறி தெஹல்கா மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போல அனுப்பப்பட்ட நிரூபரிடம் கலவரத்தை ஏற்படுத்துவது குறித்து இந்த மூன்று பேரும் பேசியுள்ளனர்.

பெங்களூர் அல்லது மங்களூரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள இடங்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறும், பிரபலமான முஸ்லீம் தலைவரை அழைக்குமாறும், அதில் தாங்கள் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அந்த மூன்று பேரும் கூறியுள்ளனர். இதற்காக ரூ.60 லட்சம் செலவாகும் என்று முத்தாலிக் கூறியுள்ளது அந்த வீடியோ பதிவில் உள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பணத்திற்காக மதக்கலவரம் நடத்த தயார் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பேசிய வீடியோவை வெளியிட்டது தெஹல்கா"

கருத்துரையிடுக