17 மே, 2010

சென்னை:பிரச்சனை முடிந்த பின்பு போலிஸ் பலப்பிரயோகம்- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்பாட்டம்

அண்ணா நகர் கிழக்கு நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள மதீனா பள்ளிவாசலில் கடந்த 30 வருடங்களாக தொழுகை நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இந்த பள்ளிவாசல் இருக்கும் இடத்திற்கு பட்டா கிடைக்கும் பட்சத்தில் சுற்றுசுவர் கட்டிக் கொள்ள நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும், அரசால் நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிஷன் மேற்படி நிலத்திற்கு பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையின் மீது அரசு எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் பள்ளிவாசலின் இடத்தில் சில சமூக விரோதிகள் குப்பைகளையும், கட்டிட கழிவுகளையும் போட்டு வருகிறார்கள். மசூதியின் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய பலமுறை முயற்சி செய்துள்ளனர். பலமுறை இதைப்பற்றி காவல் துறையில் புகார் கொடுத்தும் இதற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

இதனால் பள்ளிவாசலை சுற்றி வேலி போடுவதற்கு 15-5-2010 அன்று பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பள்ளிவாசலின் நிர்வாகம் சென்னை மாநகர ஆய்வாளர், தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு, மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு முறையாக ஒரு மாதத்திற்கு முன்பே மனு கொடுத்துள்ளனர்.

மேலும் மசூதி நிர்வாகம் வேலி அமைக்க ஜமாத்தார்கள் மற்றும் முஸ்லிம் இயக்கங்களை உதவி செய்யுமாறும் அழைத்தது. இதனடிப்படையில் ஜமாத்தார்களும் மற்றும் முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்தவர்களும் சுமார் 500 பேர் 15-02-2010 அன்று காலை 9 மணியளவில் மதினா பள்ளிவாசலில் கூடினர்.

இதன் பிறகு தாசில்தார் மற்றும் காவல் துறையினர் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தாசில்தார் எத்திராஜலு அவர்கள் கலெக்டரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாக பள்ளி நிர்வாகத்திடம் கூறினார். மசூதி நிர்வாகம் நீண்ட காலமாக இருக்கும் இப்பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறினாலும் 2 மாதகாலத்தில் மசூதி இடத்திற்கு பட்டா தருவதாக உறுதியளிக்கும் பட்சத்தில் தற்போது வேலி போடுவதை நிறுத்தி கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தாசில்தார் ஏற்கவில்லை. பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வந்து பேச்சு வார்த்தை நடத்துவதாகக் கூறி தாசில்தார் அவ்விடத்தை விட்டு சென்றார்.

தாசில்தார் சென்ற பிறகு மசூதி நிர்வாகத்தினரும், சோஷியல் டெமாக்ரெடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா[SDPI] மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் தவிர மக்கள் கூட்டம் கலைந்து சென்றது.

தாசில்தார் வருகைக்காக காத்திருந்த நேரத்தில் உதவி கமிஷனர் கண்ணப்பன் பள்ளிவாசலுக்குள் இருந்த பள்ளி ஜமாத் தலைவர், மற்றும் நிர்வாகத்தினர், SDPI தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் ஆகியோரை பலவந்தமாக கைது செய்தனர். இவர்களை விடுவிக்க கோரி உதவி கமிஷனரை சந்திக்க சென்ற பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயலாளர் இ.ஷாஹித் மற்றும் SDPI-யின் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ரஷீத் அவர்களையும் போலிஸார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI சார்பாக 15-5-2010 அன்று இரவு 7 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 160 நபர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு இரவு 11 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

பிரச்சனை சுமூகமாக முடியவிருக்கும் போது தேவையில்லாமல் பலபிரயோகம் செய்து தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த AC கண்ணப்பன் மற்றும் AC சங்கரலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 16-05-2010 அன்று சென்னை பீச் ஸ்டேஷன் கலெக்டர் அலுவலகம் முன்பு மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
source:popularfronttn.org

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சென்னை:பிரச்சனை முடிந்த பின்பு போலிஸ் பலப்பிரயோகம்- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்பாட்டம்"

கருத்துரையிடுக