5 மே, 2010

ஷொராஹ்புதீன் ஷேக் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான பிரஜாபதியைக் கொன்றது போலி என்கவுண்டரில்- குஜராத் போலீஸ் ஒப்புதல்

அஹமதாபாத்:ஷொராஹ்புதீன் ஷேக்கின் போலி என்கவுண்டர் கொலைவழக்கின் முக்கிய சாட்சியான துளசி பிரஜாபதி கொல்லப்பட்டது போலி என்கவுண்டரில் என்று குஜராத் போலீஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

இதனை குஜராத் மாநில குற்றவியல் புலனாய்வுத்துறையின் (C.I.D)உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுத்தொடர்பாக பேட்டியளித்த சி.ஐ.டியின் தலைமை அதிகாரி வி.வி.ரபாரி தெரிவிக்கையில்; "பிரஜாபதி என்கவுண்டர் கொலை போலி என்று நாங்கள் நம்பினோம். ஆதலால் இதுத்தொடர்பான புலனாய்வில் சில போலீஸ் அதிகாரிகள் இக்கொலையில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்தோம்" எனக்கூறினார். பிரஜாபதி கொலை வழக்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தாஹோத் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி விபுல் அகர்வால் ஆகியோர் நேற்று இரவு கைதுச் செய்யப்பட்டனர்.

இக்கொலை வழக்கில் பனஸ்கந்தா மாவட்ட போலீஸ் கான்ஸ்டபிள் இன்று கைதுச் செய்யப்பட்டார். பிரஜாபதி கடந்த 2006 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜியில் வைத்து அநியாயமாக என்கவுண்டரின் பெயரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை வழக்கை மேற்பார்வைச் செய்துவரும் டி.ஐ.ஜி ஐ.எம்.தேசாய் கூறுகையில்; "புலனாய்வு நடந்துக் கொண்டிருக்கிறது. புலனாய்வு முன்னேற்றம் அடையும் பொழுது இன்னும் அதிக கைதுகள் நடக்கலாம்" என்றார்.
இவ்வழக்கில் புலனாய்வு அதிகாரியாக செயல்படும் சி.ஐ.டியின் துணை சூப்பிரண்ட் ஆஃப் போலீஸ் ஆர்.கே.பாட்டீல் தெரிவிக்கையில்; "இக்குற்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் அடங்குவார். அவர் ஆஸிஸ் பாண்டியா ஆவார். இவர் துப்பாக்கியால் சுட்டதில்தான் பிரஜாபதி குண்டுபாய்ந்து இறந்தார்" என்றார்.
குஜராத் போலீஸ் துவக்கத்தில் போலீஸ் பாதுகாப்பிலிருந்த பொழுது பாதுகாவலரை சுட்டு விட்டு தப்ப முயன்றபொழுது என்கவுண்டரில் பிரஜாபதி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கூறியிருந்தது. ஆனால் ரெயில்வே போலீசும், ஃபாரன்சிக் ரிப்போர்ட்டும் இதனை பொய்யென நிரூபித்தன. சி.பி.ஐ ஷொராஹ்புதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவ்ஸர் பீவி கடந்த 2005 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கை புலனாய்வுச் செய்த பொழுது பிரஜாபதி என்கவுண்டர் ப்பற்றி குஜராத் போலீஸ் தரப்பு ஆவணங்களில் காணக் கிடைத்தது.
சி.பி.ஐ ஃபாரன்சிக் அறிக்கையை பரிசோதித்த பொழுது அவ்வறிக்கை குஜராத் போலீஸின் கூற்றைப் பற்றி கேள்வி எழுப்பியிருந்தது. பிரஜாபதி என்கவுண்டர் பற்றி குஜராத் போலீஸ் கூறியது என்னவென்றால்; பிரஜாபதி போலீஸ் பாதுகாப்புடன் ராஜஸ்தானிலிருந்து ரெயில் மூலம் திரும்பி வரும்பொழுது 3 நபர் கொண்ட கும்பல் மிளகுப் பொடியை போலீசார் மீது தூவியதாகவும், பின்னர் பிரஜாபதியை விடுவித்ததாகவும் கூறியிருந்தது. மேலும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுத்தொடர்பாக ரெயில்வே போலீசார் தெரிவிக்கையில்; "போலீசார் மீது எவரும் மிளகுப் பொடியை தூவவில்லை" என்று தெரிவித்துள்ளது. மேலும் போலீசை நோக்கி சுடப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கியை பரிசோதித்த ஃபாரன்சிக் துறை அத்துப்பாக்கி 'ஜாம்' ஆகியிருந்ததால் அதை வைத்து எவரையும் சுட இயலாது எனக்கூறியிருந்தது.

போலீசார் மீது பாய்ந்திருந்த குண்டுகள் அவர்கள் தாங்களாகவே தங்களை சுட்டுக் கொண்டது என வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி சி.பி.ஐ குஜராத் போலீஸ் மீதும் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் மீதும் 2005 ஆம் ஆண்டு போலி என்கவுண்டரில் அநியாயமாக கொல்லப்பட்ட ஷொராஹ்புதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவ்சர் பீ கொலைத் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தது.
சுப்ரீம் கோர்ட் இவ்வழக்குத் தொடர்பாக குஜராத் போலீசின் அரை குறையான புலனாய்வைக் குறித்தும் சுப்ரீம் கோர்ட்டை தவறாக புரியவைக்கும் வண்ணம் அறிக்கையை தாக்கல் செய்ததை கடுமையாக கண்டித்திருந்தது.
ஷொராஹ்புதீன் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் நான்கு ஐ.பி.எஸ் அதிகாரிகளான டி.ஐ.ஜி.D.G.வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் எம்.என் மற்றும் அபய் சுடசாமா உள்ளிட்ட 15 போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
செய்தி:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷொராஹ்புதீன் ஷேக் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான பிரஜாபதியைக் கொன்றது போலி என்கவுண்டரில்- குஜராத் போலீஸ் ஒப்புதல்"

கருத்துரையிடுக