கராமா சென்டரில் நடந்த இவ்வரவேற்பு நிகழ்ச்சிக்கு EIFF தலைவர் அப்துர் ரஸ்ஸாக் அவர்கள் தலைமை வகித்தார். EIFF ன் ஒருங்கிணைப்பாளர் நவ்ஷாத் அவர்கள் முன்னிலை வகித்தார்.அப்துர் ரஸ்ஸாக் அவர்கள் தனது உரையில் EIFF ன் பல்வேறு பணிகள் குறித்து உரையாற்றினார். துபாய் முனிசிபாலிட்டியுடன் இணைந்து அது நடத்திய சமூகப் பணிகளைச் சுட்டிக்காட்டினார்.பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் அகில இந்திய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் சாஹிப் அவர்கள் 'இந்தியா சக்திப்படுத்தப்படுவதை நோக்கி' (Towards Empowering India) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவரது உரையின் சுருக்கம் வருமாறு: "இந்தியா வளர்ந்து வரும் நாடு. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குள் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்துள்ளது. உற்பத்தியிலும்,பொருளாதார வளர்ச்சியிலும், அணு ஆயுத பலத்திலும், இராணுவ பலத்திலும், உட்கட்டமைப்பிலும், போக்குவரத்துத் துறையிலும், தகவல் தொடர்புத் துறையிலும், தொழில் புரட்சியிலும் இந்தியா மிகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இது ஒரு பக்க வளர்ச்சியே! இன்னொரு பக்கத்தைப் பார்த்தோமானால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. உறுதியான அரசியல் நிர்ணயச் சட்டம் அமைந்துள்ள நாடு. இறையாண்மை, மதச்சார்பின்மை கொண்ட நாடு. நாம் கடும் போராட்டம் நடத்தி காலனிய ஆதிக்க சக்திகளிடமிருந்து இந்த நாட்டை மீட்டு இறையாண்மையைக் காத்தோம்.ஆனால் இன்று மதச்சார்பின்மைக்கு வேறு அர்த்தம் கொடுக்கப்படுகின்றது.இந்திய சமூகத்தில் மதத்திற்கு வேலையில்லை என்று மேலை நாடுகள் கூக்குரலிடுகின்றன. ஆனால் நமது அரசியல் நிர்ணயச் சட்டம் மதத்தின் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் காட்டப்படக்கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. அதேபோல் எந்த மதத்தையும் யாரும் போற்றிப் பாராட்டவும் கூடாது என்று கூறுகிறது.
நமது அரசியல் நிர்ணயச் சட்டம் பாகம் 3 ஒரு பலமான பிரகடனத்தை முன்னிறுத்துகிறது. அதாவது அடிப்படை உரிமைகளைப் பற்றி அது கூறுகிறது. பேச்சுரிமை,வாழ்வுரிமை, தனி மனித உரிமைகள் என்று அனைத்து உரிமைகளையும் அது எடுத்தியம்புகிறது.
இன்னும் சொல்லப்போனால் சிறுபான்மையினருக்கு சட்டம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. பிரிவு 15(4), 16(4) ஆகியவை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது அதன் கனிகளை அனைத்து மக்களும் புசிக்கவேண்டும்.அதுதான் உண்மையான வளர்ச்சி. ஆனால் இன்று உள்நாட்டுக்குள்ளேயே இந்த வளர்ச்சிக்கெதிரான ஆபத்துகள் வளர்ந்து வருகின்றன. கடந்த 16 வருடங்களாக நாம் வெளியிலிருந்து அனைத்து ஆபத்துகளையும் வெற்றிகரமாக தடுத்து விட்டோம். ஆனால் உள்நாட்டில் பிரிவினை சக்திகள், அதிருப்தி குழுக்கள் தோன்றியுள்ளன.
இந்த ஆபத்துகளை நிலவிலுள்ள அரசியல் கட்சிகள் வளர விடாமல் தடுக்கத் தவறி விட்டன. மொத்த அரசாங்கமுமே ஜனநாயகத்தின் உண்மையான தத்துவத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டன. நாட்டின் வளங்களை சம பங்கீடு வைப்பதில் அரசாங்கம் தோற்று விட்டது. 80% மக்கள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் முஸ்லிம்கள் முன்னணியில் நின்றனர். ஆனால் சுதந்திரம் வாங்கி 62 ஆண்டுகள் கடந்தும் முஸ்லிம்கள் இந்தியப் பிரிவினைக்குக் காரணமானவர்கள் என்று குற்றம் சுமத்தப்படுகிறார்கள். இவைகளையெல்லாம் மனதிற் கொண்டுதான் 20 வருடங்களுக்கு முன் நாம் களத்தில் இறங்கினோம். கேரளாவில் தொடங்கி, தென்னகம் முழுவதும் பரவி இன்று இந்தியாவின் பல மாநிலங்களிலும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கால் பதித்துள்ளது.
அது பிற்படுத்தப்பட்டவர்களை சக்திப்படுத்த தன்னை தயார் படுத்திக் கொண்டுள்ளது. அரசியலில் அதிகாரம் வேண்டி SDPI என்ற புதிய அரசியல் கட்சியையும் அது தொடங்கியுள்ளது." இவ்வாறு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் தனது உரையில் கூறினார்.
இறுதியாக EIFF ன் செயலாளர் இம்தியாஸ் அவர்கள் நன்றியுரை நவின்றார்.
0 கருத்துகள்: on "எமிரேட்ஸ் இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம்(EIFF)சார்பில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தலைவருக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி"
கருத்துரையிடுக