5 ஜூன், 2010

டாக்கா தீவிபத்தில் 116 பேர் பலி

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் மக்கள் நெருக்கடி மிக்கப் பகுதி ஒன்றில் பரவிய பயங்கரத் தீயில் குறைந்தபட்சமாக 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் தீ ஆரம்பித்ததாகத் தெரிகிறது.

அருகில் இருந்த ஒரு இரசாயனக் கடையிலும் அதனை ஒட்டி எரிவாயு அடுப்புகளைக் திருமணத்திற்க்கு சமைத்துக் கொண்டிருந்த திறந்தவெளி சமையல் கூடத்திலும் தீ பரவியுள்ளது.

அடுத்த ஒரு சில நிமிடங்களில் அருகிலுள்ள பெரிய ஐந்து மாடிக் கட்டிடத்துத்துக்கு தீ பரவியுள்ளது. மோசமான வடிவமைப்பு கொண்ட இந்தக் கட்டிடத்தில் தீ பற்றினால் மக்கள் தப்பிப்பதற்குரிய மாற்று வழிகளும் இல்லை.கட்டிடத்தின் ஜன்னல்களும் இரும்புக் கம்பிகள் கொண்டு அடைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடியில்தான் கல்யாண விருந்து நடந்துகொண்டிருந்தது. விருந்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் பலரும் தப்பிக்க முயன்றும் வழியில்லாமல் தீயில் கருகினர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தீயில் சாம்பலாகி புகைந்துகொண்டிருக்கும் கட்டிடங்களுக்குகுள்ளிருந்து மீட்புக் குழுக்கள் சடலங்களை வெளியில் எடுத்து வந்த வண்ணம் இருக்கின்றனர்.

"சற்று நேரத்துக்கு முன் தான் இன்னொரு சடலத்தை வெளியில் எடுத்துள்ளனர். முழுக்க எதிர்ந்துபோய் வெறும் எலும்புக் கூட்டைத்தான் வெளியில் எடுக்க முடிந்துள்ளது. இது யாருடைய சடலம் என்றெல்லாம் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது." என்றார் சம்பவ இடத்தில் நின்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இஸ்லாம்.

"அந்த இடமே நரகம் போல காட்சியளித்தது என்றுதான் சொல்ல வேண்டும். தூரத்தில் தள்ளி நின்று மக்கள் எரிந்து சாம்பலாவதைப் பார்ப்பதைத் தவிர எங்களால் வேறொன்றும் செய்யமுடியவில்லை. ஏதோ எரிமலை பிழம்பு எல்லா திசையிலும் பரவுவதுபோல இதோ இந்த தெருவிலே அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு தீ பரவியது. எல்லா இடத்திலும் மக்கள் பயத்திலும் வலியிலும் அலறிக்கொண்டு சிதறியடித்து ஓடினார்கள்." என்று வருணித்தார் இந்த கோர சம்பவத்தை நேரில் கண்ட இக்பால் ஹுசைன்.

மக்கள் நெருக்கடி நிறைந்த குறுகிய சந்துகளின் வழியாக தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தை வந்து சேர்ந்து பணியை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகிவிட்டது.

தீவிபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்ததில்தான் டாக்காவின் தீயணைப்புத்துறை தலைமையகம் அமைந்துள்ளது.

சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கும் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா,இன்று சனிக்கிழமையை தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளார்.
source:BBC

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டாக்கா தீவிபத்தில் 116 பேர் பலி"

கருத்துரையிடுக