7 ஜூன், 2010

பெட்ரோல்,கேஸ் விலை உயர்வு குறித்து இன்று முடிவு அறிவிப்பு

புதுடெல்லி:பெட்ரோல்,டீசல் ஆகியவற்றின் விலை சுமார் ரூ3-ம், கேஸ் ரூ25 முதல் ரூ50 வரையும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை நிர்ணயம் தொடர்பாக முடிவு செய்ய அமைச்சர்கள் குழு ஒன்று ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் தலைவராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளார்.

பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி,ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மு.க.அழகிரி, வேளாண்துறை அமைச்சர் சரத் பவார்,சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கமல் நாத்,திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்தக் குழு இன்று மதியம் சந்திக்க உள்ளது.

இது குறித்து பெட்ரோலியத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'பெட்ரோல், டீசல் விலையை அரசு நிர்ணயம் செய்வதற்கு பதிலாக, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோலிய நிறுவனங்களே முடிவு செய்ய வேண்டும் என கிரீட் பாரிக் கமிட்டி ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக ஒரு கொள்கையை வகுப்பது குறித்தும்,இறக்குமதி விலைக்கும்,விற்கப்படும் விலைக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பது குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இறக்குமதி விலையை விட மிகக் குறைவான விலைக்கு பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றை நுகர்வோருக்கு அளிப்பதால் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு ரூ72,300 கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விலையை உயர்த்தாவிட்டால் இந்த நிதிக்கு வேறு ஆதாரங்களை அரசு தேட வேண்டியிருக்கும். எனவே, இவற்றின் விலையை உயர்த்துவது என்பது தவிர்க்க முடியாதது.

இறக்குமதி விலைக்கும், நுகர்வோருக்கு அளிக்கப்படும் விலைக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டுமானால் பெட்ரோல் விலை ரூ3.35 உயர்த்தப்பட வேண்டியிருக்கும்.

மம்தா பானர்ஜி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஒப்புக் கொண்டால், டீசல் விலை ரூ3.49 உயர்த்தப்படும். சிலிண்டர் விலையை ரூ50 உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.ஆனால், கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில் விலை உயர்வு சற்று குறைக்கப்படலாம்.

கிராமப்புறங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய் விலையை சிறிதளவு உயர்த்துவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.

கடந்த வார சந்தை நிலவரப்படி உயர்த்தப்பட்டிருந்தால் பெட்ரோல் விலை ரூ6.07-ம், டீசல் விலை ரூ6.38-ம் அதிகமாகி இருந்திருக்கும்.

பெட்ரோல்,டீசலை குறைந்த விலைக்கு நுகர்வோருக்கு அளிப்பதால் அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை நாளொன்றுக்கு ரூ230 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

தற்போது பெட்ரோல் ரூ3.35-ம், டீசல் ரூ3.49-ம், மண்ணெண்ணெய் ரூ18.82-ம், காஸ் சிலிண்டர் ரூ261.90-ம் நஷ்டத்தில் வழங்கப்படுகின்றன' என்றார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சற்று குறைந்துள்ளது. எனவே,தற்போதைய விலை உயர்வு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அளவிலேயே இருக்கும் இருக்கும் என எதிர்பார்ககப் படுகிறது.
dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பெட்ரோல்,கேஸ் விலை உயர்வு குறித்து இன்று முடிவு அறிவிப்பு"

கருத்துரையிடுக