புதுடெல்லி:இந்திய நாடாளுமன்றத்தின் மீது கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாவலர் உள்பட 9 பேர் தீவிரவாதிகளின் தோட்டாக்களுக்கு பலியானார்கள். தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலின் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக அப்சல்குரு உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் அப்சல்குரு மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் பெரும்பான்மையான இந்திய மக்களின் மனசாட்சிக்காக அவருக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை டெல்லி ஐகோர்ட் கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம்தேதியும், சுப்ரீம் கோர்ட் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதியும் உறுதி செய்தன.
இதையடுத்து தூக்குதண்டனையை ரத்து செய்யும்படி அப்சல் குரு சார்பாக அவரது மனைவி தபசும் 4 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதிக்கு கருணை மனு அளித்தார்.
வழக்கப்படி இந்த மனுவை மத்தியஅரசின் உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி அலுவலகம் அனுப்பி வைத்தது.
உள்துறை அமைச்சகத்திலிருந்து டெல்லி அரசின் பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 18 நினைவூட்டல் கடிதங்களுக்குப் பிறகு கடந்த 3ம் தேதி டெல்லி துணை நிலை ஆளுநர் தேஜிந்தர் கன்னா, டெல்லி அரசின் நிலைப்பாட்டை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தார்.
மத்திய அரசு தனது பரிந்துரையை கடந்த வாரம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.இதில் அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரித்துவிடலாம் என ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. தீவிரவாத குற்றத்தை மன்னிக்க முடியாது என மத்திய அரசின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: on "அப்சல்குரு கருணை மனுவை தள்ளுபடி செய்ய ஜனாதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரை"
கருத்துரையிடுக