டெல்லியில் கடந்த ஜூலை 1 அன்று சோனியா காந்தி தலைமையில் தேசிய ஆலோசனைக் கவுன்சில் (என்.ஏ.சி.) கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்பட 14 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஏழைகளின் 'உணவுக்கு உத்தரவாதம்' அளிக்கும் உணவு பாதுகாப்பை சட்டமாக்கி அமல்படுத்துவது குறித்து இந்தக் குழு தீவிரமாக ஆலோசனை நடத்தியது.
உணவு பாதுகாப்பு மசோதாவின் சாதக, பாதகங் அம்சங்கள், நாட்டின் உணவு உற்பத்தி, உணவுத் தேவை ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு தலா 3 ரூபாய்க்கு கோதுமை அல்லது அரிசி வழங்குவது, அதற்கேற்ப நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதை தீவிரமாக செயல்படுத்த தனிக் குழுவும் ஏற்படுத்தப்பட்டது.
முதலில் உணவு பாதுகாப்பு மசோதாவில் ஏழைகளுக்கு மாதம் 25 கிலோ அரிசி வழங்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சர்வதேச நடைமுறைகளின்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதந்தோறும் 35 கிலோ உணவுப் பொருள் வழங்க வேண்டும் என்பது விதியாகும்.
எனவே 35 கிலோ அரிசி அல்லது கோதுமையே வழங்கலாம் என்று சோனியா யோசனை தெரிவித்ததை தேசிய ஆலோசனைக் குழு ஏற்றுக் கொண்டது.
கிலோ ரூ. 3 விலையில் 35 கிலோ அரிசி அல்லது கோதுமையை யார் யாருக்கு, எப்படி பகிர்ந்து கொடுப்பது என்பது கடும் சவால் நிறைந்த பணியாகும். இதனால் முதல் ரட்டமாக நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 9 கோடி பேருக்கு மட்டும் குறைந்த விலையில் அரிசி, கோதுமை கொடுக்கலாம் என்று மத்திய அரசு கூறியது.
ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள அனைவருக்குமே இதை வழங்க வேண்டும், 9 கோடி பேருடன் இத் திட்டத்தை நிறுத்திக் கொள்ளக் கூடாது என்று சோனியா கூறியைதயடுத்து நாடு முழுவதிலும் ஏழை மக்கள் அதிகம் வாழும் 150 மாவட்டங்களில் முதல் கட்டமாக இந்த திட்டத்தை அமலாக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 150 மாவட்டங்களிலும் அனைவருக்குமே ரூ. 3க்கு அரிசி, கோதுமை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மற்ற 490 மாவட்டங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் அரிசி, கோதுமை வினியோகிக்கப்படும்.
விரைவில் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு சோனியா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால் நாடு முழுவதுமே ஏழைகளின் உணவுப் பஞ்சம் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்: on "புதிய உணவு கொள்கை மூலம் பசி, பட்டினியை துடைக்க மத்திய அரசு முயற்சி"
கருத்துரையிடுக