பாஜகவுக்கு இது போதாத காலமோ என்னவோ. "உப்பு விற்க போனா மழை பெய்து; மாவு விற்க போனா காத்தடிக்கு' என்ற நிலைதான். பிகார் முதல்வர் நிதீஷ்குமாரின் பிடிவாதத்தால் கூட்டணி உடைந்து போய்விடுமோ என்ற கலக்கத்திலிருந்து கட்சியின் மூத்த தலைவர்கள் இப்போதுதான் மீண்டுள்ளனர்.
அப்பாடி என்று பெருமூச்சு விடுவதற்குள் ஜஸ்வந்த் சிங் விவகாரம் மீண்டும் கட்சிக்குள் பிரச்னையை கிளப்பி உள்ளது.
ஜஸ்வந்த் சிங்கை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்ததை தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். முழு மனதோடு ஏற்றுக்கொள்ளவில்லையாம். ஜஸ்வந்த் சிங்கை மீண்டும் அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு அவசரம்? என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கடிந்து கொண்டார்களாம்.
கட்சிக்குள் மீண்டும் வந்த பிறகாவது அந்த மனிதர் வாய்மூடி மெüனம் காக்க வேண்டியதுதானே. இங்கே வந்த பிறகும் ஜின்னா பற்றிய எனது கருத்துகளில் மாற்றம் இல்லை என்று கூறி வருகிறாரே, இது எப்படி? நீங்களாவது சொல்லி வைக்கக்கூடாதா? என்று ஒரு பிடி பிடித்தார்களாம் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள்.
ஜஸ்வந்த் சிங்கைவிட அமைப்புக்கு நெருக்கமான உமா பாரதி போன்றவர்கள் எல்லாம் கட்சிக்குள் வர காத்திருக்கும்போது, ஜஸ்வந்த் சிங்க்கு மட்டும் ஏன் இந்த அவசரம் என்று கேள்வி மேல் கேள்வியாம்.
அதோடு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் கட்சியின் நிலைபாடு குறித்தும் தாய் அமைப்புக்கு கடும் அதிருப்தியாம். கட்சிக்குள் நடக்கும் எதுவுமே சரியாக இல்லை, தலைவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்று சரமாரியாக குற்றச்சாட்டாம். இவ்வளவுக்கும் புதிய இளம் தலைவர் நிதின் கட்கரி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேர்ந்தெடுத்த ஆள்.
0 கருத்துகள்: on "பாஜகவுக்கு "டோஸ்' விட்ட ஆர்.எஸ்.எஸ்"
கருத்துரையிடுக