10 ஜூலை, 2010

இஸ்ரேலின் அணு ஆயுத கொள்கை மீதான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும்௦௦- அஹ்மதி நிஜாத்

அபுஜா:ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் குறித்து பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இஸ்ரேலின் அணு ஆயுதத் கொள்கை மீதான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டியது அவசியமென ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,மேற்குலக சக்திகளால் விதிக்கப்பட்டுள்ள தடைகள் ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் நடைபெற்ற அபிவிருத்தியடைந்து வரும் 8 நாடுகளின் அமைப்பான டி8 உச்சிமாநாட்டின் பின்னர் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அஹமதி நிஜாத்,பேச்சுகளுக்கு ஈரான் ஆதரவு வழங்குவதாகவும் ஆனால்,முந்தைய பேச்சுகள் தோல்வியடைந்தமைக்கு அமெரிக்காவே காரணமெனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு என்ன நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனக் கருதுகிறீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அஹமதி நிஜாத்; 'இஸ்ரேலின் அணுவாயுதம் மீதான தமது நிலைப்பாட்டை அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டுமென்பதே எங்களது முதலாவது நிபந்தனை.

அவர்கள் அணுவாயுதங்களை வைத்திருப்பதற்கு அமெரிக்கா இணங்கினால் பேச்சுகள் வேறுவிதமாக முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மட்டுமே அணுவாயுத வல்லமையைப் பெற்றிருப்பதாகப் பரவலாகக் கருதப்படுகின்ற போதும் இதனை இஸ்ரேல் இதுவரை உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை. அத்துடன், அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இஸ்ரேல் இதுவரை கையெழுத்திடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஈரான் அணுகுண்டுகளைத் தயாரிக்க முயற்சிப்பதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் சக்தித் தேவையை நோக்கமாகக் கொண்டதே தங்களது அணுநிகழ்ச்சித் திட்டமென ஈரான் கூறிவருகிறது.

ராய்ட்டர்ஸ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலின் அணு ஆயுத கொள்கை மீதான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும்௦௦- அஹ்மதி நிஜாத்"

கருத்துரையிடுக