20 ஆக., 2010

அணுசக்தி இழப்பீடு மசோதாவும், போலி மோதல் கொலை வழக்கும்

போபால் விஷவாயு விபத்து, இந்திய மக்களால் மறக்க முடியாத துயரச் சம்பவம். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசு இதுவரை அநீதியே இழைத்து வருகிறது.

போபால் விஷவாயு விபத்திற்கு காரணமான கும்பல் நஷ்ட ஈடும் வழங்காமல், தண்டனையிலிருந்தும் தப்பிவிட்டன. ஆனால் இதில் பாடம் கற்றுக்கொள்ளவியலாத இந்திய அரசு தற்பொழுது இலாபம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு வெறிபிடித்து அலையும் அமெரிக்க அணுசக்தி கம்பெனிகளுக்கு சேவையாற்ற முன்வந்துள்ளது.

உலகிலேயே அணு உலை விபத்துகளில் 71 சதவீதம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே, மருத்துவக் கழிவுகளையும், மின்னணு கழிவுகளையும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளிலிருந்து இந்த நாட்டில் இரகசியமாக கொட்டிக் கொண்டிருக்கும் வேளையில், பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் துருப்பிடித்துப் போன அணு உலைகளை விலைக்கு வாங்கி இங்கே நிர்மாணிக்கப் போகிறார்களாம்.

அத்தோடு, அதனால் ஏற்படும் விபத்திற்கு இழப்பீடு கோர முடியாதவாறு நயவஞ்சகமும், துரோகமும் நிறைந்த சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் தலைமையிலான அரசு முயன்று வருகிறது.

இந்த சட்டத்தை நிறைவேற்றி அமெரிக்காவுக்கு சேவகம் செய்யத் துணிந்த பிறகு சூடு சுரணையெல்லாம் எதற்கு?

ஆகவே இச்சட்டத்தை நிறைவேற்ற பெரும்பான்மை ஆதரவைத் திரட்டுவதற்கு காங்கிரஸின் கையில் கிடைத்த ஆயுதம் சொராஹ்புதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் நரேந்திர மோடியின் பங்கு.

விசாரணையை மேற்கொண்ட சி.பி.ஐ நரேந்திரமோடியை நல்லபிள்ளை என சான்றிதழ் வழங்கிவிட்டது. இதனால் தான் கடந்த சில தினங்களாக இடதுசாரிகளும், ஆர்.ஜே.டி., எஸ்.பி., பி.எஸ்.பி உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் ஸ்தம்பிக்க வைத்தன.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு எதிரான நடவடிக்கையை சி.பி.ஐ நிறுத்தி வைத்தால் அணுசக்தி இழப்பீடு மசோதாவை ஆதரிப்போம் என்ற பா.ஜ.கவின் நிலைப்பாட்டினால்தான் இவ்விவாதம் கிளப்பப்பட்டுள்ளது.

சி.பி.ஐ யை இனிமேலும் கட்டவிழ்த்துவிட்டால் பாராளுமன்றத்தில் அணுசக்தி இழப்பீடு மசோதாவை நிறைவேற்ற இயலாது என்பது பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லியின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது.

காங்கிரஸ் பேரம் பேசுகிறது என்பது சி.பி.ஐயின் பல்டியிலிருந்து புலப்படுகிறது.

இரண்டு பல்டிகள் இவ்விவகாரத்தில் நிகழ்ந்துள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.கவின் கடுமையான எதிர்ப்பிற்கிடையேத்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இம்மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மசோதாவைக் குறித்த எதிர் கருத்துகளும், அபிப்ராயங்களும் பரிசீலித்து திருத்தம் மேற்கொள்ள பாராளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட பொழுதும், போதுமான மாற்றங்களை மேற்கொள்ளவில்லை எனக்கூறி இடதுசாரிகள் எதிர்ப்பைத் தொடருகின்றனர்.

அதேவேளையில், மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் திருப்தி அளிப்பதாக கூறித்தான் பா.ஜ.க பல்டி அடித்ததும், மசோதாவிற்கு ஆதரவு அளித்ததுமாகும். அதாவது, கடைசி நிமிடம் வரை போலி என்கவுண்டர் கொலை வழக்கில் மோடியின் மீது நடவடிக்கை எடுத்தால் மசோதாவை
எதிர்ப்போம் என்ற பேரம் நடந்த பிறகுதான் இந்த பல்டி.

இன்னொரு பல்டி, சி.பி.ஐயின் தரப்பில். போலி என்கவுண்டர் கொலையை தலைமை ஏற்று நடத்திய போலீசாரை காப்பாற்ற நரேந்திரமோடி தலையிட்டார் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக சி.பி.ஐ முதலில் தெரிவித்தது. தற்பொழுது பேரத்தின் விளைவாக பல்டியடித்து நற்சான்றிதழை மோடிக்கு வழங்கியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை ஒத்துக்கொள்ளும் சூழ்நிலை ஆதாரங்கள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த உண்மையை இச்சம்பவம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அது, சி.பி.ஐ போன்ற புலனாய்வு ஏஜன்சிகளை அரசியல் விருப்பங்களை நிறைவேற்றும் கருவியாக மாற்றுகின்றனர் என்பதுதான்.

நமது அரசு அமைப்புகள் அரசியல் நிர்பந்தத்திற்கு ஆளாகிய சம்பவங்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன. அதன் விளைவாக, குற்றவாளிகள் தப்புவதும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி மறுக்கப்படுவதும் தொடர்கிறது.

அணுசக்தி இழப்பீடு மசோதாவில் இத்தகையதொரு சந்தர்ப்பவாதம் நிகழ்ந்திருக்குமானால் இந்தியாவில் ஜனநாயகத்திற்கு என்ன மதிப்பு உள்ளது?

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அணுசக்தி இழப்பீடு மசோதாவும், போலி மோதல் கொலை வழக்கும்"

கருத்துரையிடுக