12 ஆக., 2010

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெளிநாடு வாழ் இந்தியருக்கு உதவ நலநிதி: வயலார் ரவி

புதுடெல்லி,ஆக12:வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் நெருக்கடி ஏற்பட்டு தத்தளித்தாலோ அல்லது வேலை இழந்து சிக்கலில் இருந்தாலோ அவர்களுக்கு உதவ நல நிதி அமைக்கப்பட்டுள்ளது என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது புதன்கிழமை அவர் கூறியதாவது: "42 நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இந்த நல நிதி அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்று வேலை கிடைக்காமல் பணம், பொருள், தங்க இடமின்றி தவிப்போர், வேலை இழந்து தத்தளிப்போர் போன்றவர்களுக்கு அவசர உதவி அளிக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இந்த நிதியிலிருந்து உணவு, தங்கும் வசதி, மருத்துவ வசதி, ஊர் திரும்ப விமான டிக்கெட் வசதி செய்து தரப்படும்.

இந்தியர்கள் அதிகமாக செல்லும் வளைகுடா நாடுகள், ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் இந்த நிதி அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மாலத்தீவு, சிங்கப்பூர், பிலிப்பின்ஸ், போர்ச்சுகல், பிஜி, ஆப்கானிஸ்தான், மொரீஷஸ்,தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த நிதி உதவி கிடைக்கும். மத்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் இந்த நிதி அமைக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் வெளிநாட்டில் உயிரிழக்கும் இந்திய நாட்டவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு போய் சேர்க்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

கத்தாரிலிருந்து 199 இந்திய தொழிலாளர்களும் மலேசியாவிலிருந்து ஒருவரும் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர் என்றார் வயலார் ரவி.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெளிநாடு வாழ் இந்தியருக்கு உதவ நலநிதி: வயலார் ரவி"

கருத்துரையிடுக