
இந்த பதிலால், இந்திய அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அவ்வப்போது அச்சுறுத்தல் எழுவதால், மொபைல் போன்கள் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் அனைத்தையும், இந்திய அரசு கண்காணித்து வருகிறது.
கனடா நாட்டிலுள்ள, 'ரிம்' நிறுவனத்தின் தயாரிப்பான 'பிளாக்பெர்ரி' மொபைல் போனை, லட்சக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.
'பிளாக்பெர்ரி' மொபைல் மூலம் பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்து கேட்கும் வசதி இந்தியாவிடம் இல்லை. இந்த போனுக்கான சர்வர் கனடாவில் உள்ளதால், இதன் பிரத்யேக குறியீடுகளை கண்காணிக்க, அந்த சர்வரில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் அல்லது இந்தியாவில் ஒரு சர்வர் நிர்மாணிக்க வேண்டுமென, மத்திய உள்துறை அமைச்சகம், 'ரிம்' நிறுவனத்திடம் கேட்டிருந்தது.
முதலில் தயங்கிய இந்நிறுவனம்; "அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தனியாக சர்வர் அமைத்துள்ளீர்கள். எங்களுக்கு கண்காணிப்பு வசதி ஏற்படுத்தி தரவில்லையெனில், இந்தியாவில் 'பிளாக்பெர்ரி' மொபைல் போன்களில் செயல்பாடுகளை முடக்கி விடுவோம்' என, இந்தியா எச்சரித்ததை அடுத்து, வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி கூறியது. ஆனால் நேற்று, தன் நிலையிலிருந்து 'ரிம்' நிறுவனம் பின் வாங்கி விட்டது.
அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இந்தியாவின் கோரிக்கையை எங்களால் நிறைவேற்ற இயலவில்லை. 'பிளாக்பெர்ரி' மொபைல் போன்களில் பரிமாறப்படும் தகவல்களை, கண்காணிப்பு ஏஜன்சிகள் மட்டுமல்ல; எங்களால் கூட படிக்க முடியாது. வாடிக்கையாளர்களின் வசதிக்காகவே இது போன்ற பாதுகாப்பு வடிவமைப்பை, மொபைல் போன்களில் ஏற்படுத்தியுள்ளோம்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'ரிம்'மின் இந்த அறிக்கையால், இந்திய அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது. ஏனெனில் இந்தியாவில், 10 லட்சம் 'பிளாக்பெர்ரி' மொபைல் உள்ளதென்பதால், அரசுக்கு கூடுதல் பிரச்னை எழுந்திருக்கிறது.
0 கருத்துகள்: on "இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது- 'பிளாக்பெர்ரி' நிறுவனம்"
கருத்துரையிடுக