29 ஆக., 2010

காவி பயங்கரவாதம் பற்றிய உள்துறை அமைச்சரின் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் ஆதரவு

புதுடெல்லி,ஆக29:காவி தீவிரவாதத்தால் ஆபத்து ஏற்படக்கூடும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்து உள்ளது. எனினும் இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் சிதம்பரத்தின் பேச்சை ஆதரித்துள்ளன.

சிதம்பரம் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்டனர். இதை அடுத்து அவை இரு முறை ஒத்தி வைக்கப்பட்டது.

மூன்றாவது முறையாக அவை கூடிய போது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில் அமைச்சர் சிதம்பரத்தின் பேச்சு நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் பலரைக் குறிப்பதாக அமைந்துள்ளது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பிருந்தா காரத்,"சிதம்பரம் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுப்படையாகத்தான் காவி தீவிரவாதம் பற்றி சொன்னார்" என்று சிதம்பரத்துக்கு ஆதரவாகப் பேசினார்.

பின்னர் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிருந்தா காரத் கூறியது: "அருண் ஜேட்லி அவரது கட்சியின் சார்பாகப் பேசியுள்ளார். சிதம்பரம் பேசிய வார்த்தை யாரையும் தனிப்பட்ட முறையில் குறிக்கவில்லை. இந்து மதத்தின் பெயரில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் குழுக்களைப் பற்றியதுதான் இப்போதைய பிரச்னை" என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், சிதம்பரத்தின் கருத்தை ஆதரித்து பேசினார். அவர் கூறியது: "ஆர்,எஸ்.எஸ். இயக்கம்தான் மற்ற குழுக்களை வழிநடத்திச் செல்கிறது. இவ்வாறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் இயக்கங்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேனும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்தால் எந்த முகாந்திரமும் இல்லாமல் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது" என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காவி பயங்கரவாதம் பற்றிய உள்துறை அமைச்சரின் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் ஆதரவு"

கருத்துரையிடுக