29 ஆக., 2010

வெளிநாட்டு நன்கொடைகளை முறைப்படுத்த புதிய சட்டம்

புதுடெல்லி,ஆக29:வெளிநாட்டிலிருந்து பெறப்படும் நன்கொடைகளை முறைப்படுத்த புதிய ஒழுங்குமுறை சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.

இந்தியாவில் உள்ள சில தனியார் மற்றும் சமூக அமைப்புகளுக்கு நன்கொடை, நிதியுதவி மற்றும் வேறுவகையான முறைகளில் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான நிதி வருகிறது. இவை முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அந்த அமைப்புகள் அரசுக்கு தெரியப்படுத்தாத காரணத்தால் 'அன்னிய நன்கொடை முறைப்படுத்துதல் சட்டம் 2010' என்ற புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம் அமைப்புகள் வெளிநாட்டு நிதியுதவி பெற்றன. ஆனால் இவற்றில் 18 ஆயிரம் அமைப்புகள் மட்டுமே அவற்றை செலவிட்டதற்கான கணக்கை அரசிடம் சமர்ப்பித்துள்ளன. இவ்வாறு பெறப்படும் நிதியை சில அமைப்புகள் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு செலவிடப்படுவதாக வந்த தகவலையடுத்து அரசால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையில் வெள்ளிக்கிழமை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்ப்பு இன்றி உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மக்கான், தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. சமூக அமைப்புகள் என்ற போர்வையில் சில மத அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நிதியைப் பெற்று தீவிரவாத நோக்கத்துக்காக செலவிடுகின்றன. உண்மையான நோக்கத்துக்காக நிதியைப் பெற்று செலவிடும் தன்னார்வ நிறுவனங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வெளிநாட்டு நன்கொடைகளை முறைப்படுத்த புதிய சட்டம்"

கருத்துரையிடுக