வாஷிங்டன்,ஆக8:பேராசிரியை டோனா ஷலாலா என்பவர் கிளிண்டன் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் சுகாதாரத்துறையின் செயலாளராக பணியாற்றியவர். தற்பொழுது மியாமி பல்கலைக்கழகத்தில் தலைமைப் பொறுப்பை வகித்து வருகிறார்.ஆனால்,இதெல்லாம் இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்தில்
செல்லுபடியாகவில்லை. பேராசிரியையின் பெயரின் கடைசியில் அரபுப்பெயர்(ஷலாலா) இருந்த காரணத்தால் அவரை விமானநிலையத்தில் இரண்டரை மணிநேரம் பாடாய்படுத்திவிட்டனர்.
கிளிண்டன் ஆட்சிக்காலத்தில் எட்டு ஆண்டுகள் சுகாதாரத்துறையின் செயலாளராக பணியாற்றிய ஷலாலாவின் பயண ஏற்பாடுகளைச் செய்தவர்கள் வி.ஐ.பி என்பதை விமானநிலைய அதிகாரிகளுக்கு முன்னரே தகவலைத் தெரிவித்திருந்த போதிலும் அது ஒன்றும் செல்லுபடியாகவில்லை.
இஸ்ரேலுக்கு எதிரான பல்கலைக்கழக புறக்கணிப்பை எதிர்ப்பதற்காகத்தான் தான் இஸ்ரேல் வந்துள்ளதாக ஷலாலா கூறியதும் உதவவில்லை.
அமெரிக்காவில் குடியேறிய லெபனான் வம்சாவழியைச் சார்ந்தவருக்கு பிறந்த 69 வயதான ஷலாலா இதற்கு முன்பு ஏராளமான தடவை இஸ்ரேலுக்கு வருகைப் புரிந்துள்ளார்.
இஸ்ரேல்,அமெரிக்கா, ஃபலஸ்தீன் பல்கலைக்கழகங்களுக்கிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்க யூத காங்கிரஸின் பிரதிநிதியாக ஷலாலா இஸ்ரேலுக்கு வந்தார்.
இவருடைய சுற்றுப்பயணத்தின் பொழுது அவருடன் வந்த குழுவினர் இஸ்ரேலிய அதிபர் ஷிமோன் ஃபெரஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் டானி அயலோன், ஃபலஸ்தீன் ஸலாம் ஃபையாத் ஆகியோருடன் சந்திப்பு நடத்தினர்.
அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தின் பொழுது இரண்டு நாட்கள் தனிப்பட்ட ரீதியில் இஸ்ரேலில் தங்கிய ஷலாலா புறப்படுவதற்கு முன்பு விமானநிலைய அதிகாரிகளிடம் தான் ஒரு வி.ஐ.பி என்று தெரிவித்திருந்தார் என யூத காங்கிரஸ் கூறியுள்ளது.
ஆனால் அது குறித்து தங்களுக்கு தெரியாது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டரை மணிநேரம் விமானநிலையத்தில் தடுத்து வைத்த அதிகாரிகள் தன்னிடம் அவமானப்படுத்துவிதமான கேள்விகளை கேட்டதாகவும், தனது பேக்குகளை தீவிரமாக பரிசோதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அரபு பெயர்:அமெரிக்க வி.ஐ.பிக்கு இஸ்ரேல் விமானநிலையத்தில் அவமானம்"
கருத்துரையிடுக