அகமதாபாத்,ஆக1:குஜராத் மாநில நீதித்துறையை அவமதிக்கும் முயற்சியில் மத்திய அரசும்,சிபிஐ-யும் இறங்கியுள்ளதாக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.குஜராத் என்ன எதிரி மாநிலமா? அது இந்தியாவில்தானே இருக்கிறது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
போலி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.
இதுத் தொடர்பாக சனிக்கிழமை அகமதாபாத்தில் நடந்த மரம் நடும் விழாவில் மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசினார் நரேந்திர மோடி. புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணையையும் அவர் குற்றம் சாட்டினார். அவர் மேலும் பேசியது:
"போலி என்கவுன்ட்டர் வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமெனில் இந்த வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சிபிஐ கோரியுள்ளது, மாநில நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும். குஜராத் மாநிலம் இந்தியாவில் இல்லையா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"காங்கிரஸ் அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக போலி என்கவுன்ட்டர் வழக்கை எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கு சாதகமாக 2005-ம் ஆண்டு நிகழ்ந்த என்கவுன்ட்டர் வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.
மத்திய அரசின் இத்தகைய செயலானது குஜராத் மாநிலத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். அத்துடன் மாநிலத்தின் நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும். மாநிலத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்களை அவமதிக்கும் செயல் இது" என்றும் மோடி குற்றம் சாட்டினார்.
"கடந்த 8 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியினர் எனது பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மாநிலத்தின் நீதித்துறையை களங்கப்படுத்த முயன்றுள்ளனர். எனது வளர்ச்சியைப் பிடிக்காவிட்டால், என்னை மட்டுமே தாக்கலாம், அதற்காக மாநிலத்தின் நீதித்துறையை அவமதிப்பதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது" என்றும் அவர் கூறினார்.
"பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதில் ஏதேனும் தவறாக செயல்பட்டு வந்தேனா அகமதாபாத் வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதில் ஏதேனும் தவறு நடந்ததா இருப்பினும் பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படுவததைத் தடுப்பது ஏன்?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.
"குஜராத் மாநிலத்தை எதிரி மாநிலம் போல நடத்துவது ஏன்?, குஜராத் மாநிலத்தில் உள்ள நீதிபதிகள் திறமையற்றவர்களா அல்லது வேறு மாநில நீதிபதிகள் மிகச் சிறந்தவர்களா அல்லது குஜராத்தில் உள்ள நீதிமன்றங்கள் மோசமானவை" என்று அர்த்தமா என்று மோடி கேட்டார்.
"அமைதி வழியில் வளர்ச்சியடையும் மாநிலமாக குஜராத் திகழ்கிறது. இம்மாநில வளர்ச்சியை சிலர் விரும்பவில்லை. எனவேதான் இதைக் கெடுக்க முயல்கின்றனர். மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் இம்மாநிலத்தில் அமைதி நிலவுவதை விரும்பவில்லை. அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர்.
பெஸ்ட் பேக்கரி வழக்கு விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை மும்பைக்கு மாற்றப்பட்டாலும், விசாரணை முழுவதையும் நடத்தியது குஜராத் போலீஸார்தான்.
வழக்கு விசாரணை மற்றும் குற்றப் பத்திரிகையை தயாரித்து அளித்ததும் குஜராத் போலீஸார்தான்" என்று மோடி குறிப்பிட்டார்.
"நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் மட்டும்தான் மாறுபட்டிருந்தது. மற்ற அனைத்தும் அதாவது வழக்கு விசாரணை முழுவதையும் நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது குஜராத் போலீஸார்தான். இதேபோல பில்கிஸ் பானு வழக்கு முதலில் சிபிஐக்கு மாற்றப்பட்டது. குஜராத் போலீஸார் வழக்குப் பதிவு செய்தவர்களில் ஒருவர் தவிர அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
இதிலிருந்தே, குஜராத் போலீஸார் சிறப்பாக செயல்படுவது புரியும். ஆனால் சிபிஐ நடவடிக்கை தவறானது என்பது நிச்சயம் தெரியவரும்" என்றார் மோடி.

0 கருத்துகள்: on "குஜராத் மாநில நீதித்துறையை அவமதிக்கும் முயற்சியில் மத்திய அரசு- நரேந்திர மோடி குற்றச்சாட்டு"
கருத்துரையிடுக