21 செப்., 2010

மத்தியப் பிரதேசத்தில் ரயில்கள் மோதல்: 20 பேர் பலி 50 பேர் படுகாயம்

சிவபுரி,செப்.21:மத்தியப் பிரதேசத்தில், நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தூரிலிருந்து குவாலியருக்கு சென்றுக் கொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பதர்வாஸ் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது, எதிர் திசையில் அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில், பயணிகள் ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் பயணிகள் ரயிலின் முதல் இரண்டு பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. அதில் இருந்த பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் அருகில் உள்ள சிவபுரி மற்றும் குணா நகர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்தனர்.

கோட்டா மற்றும் ஜான்சி நகரங்களில் இருந்து மீட்பு ரயில்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. ஜான்சியில் உள்ள ராணுவ படைத் தளத்தைச் சேர்ந்த வீரர்கள் ஹெலிகாப்டரில் விரைந்துச் சென்றனர். பலத்த காயமடைந்தவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

விபத்து நேரிட்டபோது அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

சரக்கு ரயிலின் டிரைவர் சிக்னலை கவனிக்காமல் ரயிலை செலுத்தியதால் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்துக்கு முன்னதாக சரக்கு ரயிலின் டிரைவர், ரயிலில் இருந்து குதித்து உயிர் தப்பி விட்டார். இன்டர்சிட்டி ரயிலின் இரு டிரைவர்களும் உயிர் தப்பி விட்டனர். விபத்து குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டிரைவர்கள் மது அருந்தி இருந்தார்களா என்பதை அறிய ரத்த மாதிரி எடுக்கப்பட்ட ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, விபத்து நேரிட்ட ரயில் நிலையத்தின் அதிகாரி போதையில் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். அவரது ரத்த மாதிரியும் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விபத்து குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வே துறையில் பணி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மத்தியப் பிரதேசத்தில் ரயில்கள் மோதல்: 20 பேர் பலி 50 பேர் படுகாயம்"

கருத்துரையிடுக