21 செப்., 2010

கஷ்மீர் சென்றுள்ள அனைத்துக்கட்சிக் குழுவின் முதல்நாள் நிகழ்வு

ஸ்ரீநகர்,செப்.21:கஷ்மீர் மாநிலத்தில் மூன்று மாதங்களாக வன்முறை நடந்து வருகிறது. வன்முறையால் இயல்பு வாழ்க்கை முடங்கி விட்ட நிலையில், அங்குள்ள நிலவரம் பற்றி தெளிவான கண்ணோட்டம் பெறவும், பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கிலும் அனைத்துக் கட்சிக் குழுவை கஷ்மீர் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து 42 பேர் கொண்ட குழு திங்கள்கிழமை ஸ்ரீநகர் சென்றது.

இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலு (திமுக), தம்பிதுரை (அதிமுக), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

முதலில் ஆளும் கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சிப் பிரதிநிதிகள் அனைத்துக் கட்சிக் குழுவைச் சந்தித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். கஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரத்தை மீண்டும் அளிப்பது இப்போதைய பிரச்னைக்கு சிறந்த தீர்வு என்று தெரிவித்தனர்.

பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைத் தவிர மற்ற எல்லா அதிகாரங்களும் மாநில அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சி குழுவிடம் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டதாக தேசிய மாநாட்டு கட்சி மூத்த தலைவர் அப்துல் ரஹீம் தெரிவித்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை குறித்து கேட்டபோது, இது மிகவும் அபத்தமானது என்றார் அவர்.

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, அனைத்துக் கட்சிக் குழுவைச் சந்திக்கவில்லை. கஷ்மீரின் மூலை முடுக்கெல்லாம் ஊரடங்கை அமல்படுத்தி மனதை வேதனைப்படுத்தும் மாநில அரசின் செயலால் அனைத்துக் கட்சிக் குழுவை சந்திக்க யாரும் முன்வரமாட்டார்கள். இத்தகைய அடக்குமுறை தொடர்ந்தால் இந்த குழுவில் எமது கட்சி இடம்பெறுவது சந்தேகமே என அவர் ஏற்கெனவே கூறியிருந்தார். அதன்படி அவர் அனைத்துக் கட்சி குழுவை சந்திக்கவில்லை.

சாதாரண மக்களை இந்த குழு சந்தித்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் மாநில அரசு ஊரடங்கு உத்தரவை புதிய இடங்களுக்கு நீட்டித்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இருப்பினும் அவரது கட்சி சார்பில் 15 பேர் கொண்ட குழு, அனைத்துக் கட்சி குழுவைச் சந்தித்தது.

ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட திட்டங்களைக் கைவிட்டு புதிய அணுகுமுறை கடைபிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனைத்துக் கட்சிக் குழு சென்று பார்வையிட வேண்டும் என்று அவர்கள் கோரினர். கஷ்மீர் பிரச்னையில் இரு அம்சங்கள் உள்ளன. நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது ஒன்று. மாநில அரசின் தவறான அணுகுமுறையால் சீர்கெட்ட சூழ்நிலையை சரி செய்வது என்பது மற்றொன்று. இப்போது நிலைமை இந்த அளவுக்கு மோசமானதற்கு மாநில அரசின் தவறே காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர். அனைத்துக் கட்சி குழுவிடம் தெரிவித்த யோசனைகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார் மக்கள் ஜனநாயகக்கட்சி தலைவர் நிஜாமுதீன் பட்.

பிரச்னைக்குத் தீர்வுகாண புதிய அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று ஜம்மு கஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ் கூறினார்.

ஹுரியத் தலைவர்கள் சந்திக்க மறுப்பு:
ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, ஹுரியத் கட்சியின் மற்றொரு பிரிவுத் தலைவர் மிர்வைஸ் உமர் பாரூக், கஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் ஆகியோர் அனைத்துக் கட்சி குழுவை சந்திக்க மறுத்துவிட்டனர்.

கடந்த 4 மாதங்களாக ஊடரங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சாமானிய மக்கள் மிகவும் துயரப்படுவதாக அனைத்துக கட்சி குழுவிடம் பலர் முறையிட்டனர்.

ராணுவத்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ராணுவத்தை விலக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. அனத்துக் கட்சி குழு இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை ஜம்மு பகுதிக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் கருத்துகளைக் கேட்கும் என்று தெரிகிறது.

கடந்த சில மாதங்களாக கஷ்மீரில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. "மாநிலத்திலிருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ளவேண்டும், கஷ்மீர் பிரச்னைக்குரிய பகுதி என ஒப்புக்கொள்ளவேண்டும், ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறவேண்டும்' என்றெல்லாம் கஷ்மீர்௦ மக்கள் ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தத்தை அன்றாடம் நடத்துகின்றனர். அப்போது மூளும் வன்முறை, கல்வீச்சு, பாதுகாப்புப் படையினர் நடத்தும் துப்பாக்கிச்சூடு நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி. கஷ்மீர் சென்றுள்ள அனைத்துக் கட்சி குழுவைச் சந்திக்க கிலானி மறுத்துவிட்டார். இதையடுத்து அனைத்துக் கட்சிக் குழுவுடன் அங்கு சென்றுள்ள யெச்சூரி கிலானியை தனியாக சந்தித்துப் பேசினார்.

அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள திமுக எம்.பி. டி.ஆர். பாலு, ரத்தன் சிங் அஞ்னாலா (அகாலிதளம்), நமோ நாகேஸ்வரராவ் (தெலுங்கு தேசம்), முஸ்லிம் மஜிலிஸ் தலைவர் அசாதுத்தீன் ஓவைசி ஆகியோரும் கிலானியைச் சந்தித்தனர்.

கஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான யோசனைகள் குறித்து கிலானியுடன் இந்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதுபோல் அனைத்துக் கட்சிக் குழுவைச் சந்திக்க மறுத்த ஹுரியத் தலைவர் மிர்வைஸ் உமர் பாரூக், ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் ஆகியோரை அவர்கள் இருக்கும் இடத்திற்க்குச் சென்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா சந்தித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர் சென்றுள்ள அனைத்துக்கட்சிக் குழுவின் முதல்நாள் நிகழ்வு"

கருத்துரையிடுக