23 செப்., 2010

அயோத்தி தீர்ப்பு செப்.28ம் தேதி வரை ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

டெல்லி,செப்.23:நாளை வழங்கப்படுவதாக இருந்த அயோத்தி தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட கருத்தை தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

அயோத்தி குறித்த 60 ஆண்டு கால வழக்கில் நாளை அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறவிருந்தது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி முன்னாள் அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் திரிபாதி.

நேற்று இந்த மனு கபீர், பாதக் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது இதை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறி விட்டனர். இதையடுத்து திரிபாதியின் மனு இன்று நீதிபதிகள் எச்.எல். கோகலே, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த இரு நீதிபதிகளும் வேறுபட்ட கருத்தைத் தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில் அயோத்தி தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதிக்கு தள்ளி வைத்து பெஞ்ச் உத்தரவிட்டது.

நீதிபதி கோகலே தீர்ப்பை தள்ளி வைக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்த விவகாரத்தில் சமரசம் பேச வாய்ப்பு உள்ளது என்றால் அதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஒரு சதவீத வாய்ப்பு இருந்தால் கூட பரவாயில்லை, அதை அளிக்க வேண்டும்.

ஒரு தீர்ப்பால் பலரும் பாதிக்கப்படக் கூடும் என்றால், முடிந்தவரை பேச்சுவார்த்தைக்கு முயற்சித்துப் பார்க்கலாம். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திப் பார்க்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை.

இந்த தீர்ப்பால் பாதிப்பு ஏற்பட்டால் அது சாமானிய மக்களைத்தான் பாதிக்கும். மக்களை பாதித்தால் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டைத்தான் குறை கூறுவார்கள். எனவே இந்த தீர்ப்பை தள்ளி வைக்கலாம் என்று தெரிவித்தார்.

நீதிபதி ரவீந்திரன் கூறுகையில், இப்போது தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டிய காரணம் என்ன உள்ளது. இந்த விவகாரம் கடந்த 60 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்சினை தீர்ந்து விடும் என்பதை எப்படி நம்ப முடியும் என்றார்.

இருப்பினும் நீதிபதி கோகலேவின் கருத்தை தான் மதிப்பதாக தெரிவித்த ரவீந்திரன், தீர்ப்பை தள்ளி வைக்க உடன்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து செப்டம்பர் 28ம்தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதிகள், திரிபாதியின் மனு மீதான விசாரணையையும் அன்றைய தினத்திற்கே தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இதன் மூலம் பெரும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு நாளை வெளிவராது என்பது உறுதியாகி விட்டது. இருப்பினும் செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவிக்கப் போகும் உத்தரவைப் பொறுத்தே அயோத்தி தீர்ப்பின் எதிர்காலம் அமைந்துள்ளது.

வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அயோத்தி தீர்ப்பு செப்.28ம் தேதி வரை ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு"

கருத்துரையிடுக