15 செப்., 2010

குடியேற்ற நிர்மாண சர்ச்சைக்கிடையே ஃபலஸ்தீன் - இஸ்ரேல் 2-வது கட்ட பேச்சுவார்த்தை

கெய்ரோ,செப்.15:மேற்கு கரையில் குடியேற்ற நிர்மாணத்திற்கு ஏற்படுத்திய பகுதி அளவிலான தடையின் காலாவதி முடிவடையும் சூழலில் ஃபலஸ்தீன்-இஸ்ரேல் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை எகிப்தில் துவங்கியது.

ஷரமுஷேக்கில் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில் ஃபலஸ்தீன் அதாரிட்டி அதிபர் மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகும், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேற்குகரையில் நிர்மாண நடவடிக்கைகளை முடக்கியதன் பரப்பு எல்லையை இஸ்ரேல் அதிகரிக்கவேண்டும் என ஹிலாரி கிளிண்டன் பேச்சுவார்த்தைத் துவங்குவதற்கு முன் கோரியிருந்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் குடியேற்ற நிர்மாணங்கள் மீண்டும் துவங்கினால் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவோம் என ஃபலஸ்தீன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்குக்கரையில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட ஆயிரம் வீடுகளில் சிலவற்றின் நிர்மாணம் துவங்கப்படாது எனவும், இந்த மாதம் 26 ஆம் தேதி முடிவடையும் மொரட்டோரியத்தின் கால அவகாசத்தை நீட்டிக்க இயலாது எனவும் நெதன்யாகு நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

அதேவேளையில், பகுதி அளவிலான தீர்வு என்பது எங்களால் இயலாது என ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் ஸாஇப் எரகாத் கருத்துத் தெரிவித்துள்ளார். குடியேற்ற நிர்மாணங்களை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அதற்கு முழு பொறுப்பும் இஸ்ரேல்தான் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஃபலஸ்தீனில் ஒரு பிரிவுத் தலைவர்கள் மட்டுமே இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டுள்ளனர்.ஆனால், காஸ்ஸாவின் மீது முழு கட்டுப்பாட்டைக் கொண்ட போராளி இயக்கமான ஹமாஸ் இப்பேச்சுவார்த்தையை எதிர்க்கிறது. "நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்கமாட்டோம் எனவும், ஏற்கனவே நிகழ்ந்ததுபோல் பேச்சுவார்த்தை எந்தத் தீர்வையும் தராது" எனவும் ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் ஸஹர் தெரிவித்துள்ளார்.

"நல்லதொரு தீர்வு கிடைக்கும் எனக்கருதி எந்த ஃபலஸ்தீனரும் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கமாட்டார். தற்பொழுது நடைபெறுவது வெறும் சந்திப்பு மட்டுமே. ஃபலஸ்தீனர்களைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தை வெற்றிப் பெறாது." இவ்வாறு ஸஹர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை வெற்றிப்பெறும் என ஹிலாரி கிளிண்டன் நம்பிக்கைத் தெரிவித்தார். 20 மாதம் முன்பு முடங்கிய பேச்சுவார்த்தை இந்த மாதம் 2-ஆம் தேதி வாஷிங்டனில் துவங்கியதே வெற்றிதான் என அவர் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு காஸ்ஸாவை இஸ்ரேல் கொடூரமாக ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை முடங்கியது.

இதற்கிடையே, மேற்குகரையில் ரெய்டு நடத்திய இஸ்ரேலிய ராணுவம் 10 ஃபலஸ்தீனர்களை பயங்கரவாதத் தாக்குதலுக்கு முயற்சித்தார்கள் எனக்கூறி கைதுச் செய்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குடியேற்ற நிர்மாண சர்ச்சைக்கிடையே ஃபலஸ்தீன் - இஸ்ரேல் 2-வது கட்ட பேச்சுவார்த்தை"

கருத்துரையிடுக