23 செப்., 2010

தர்மபுரி பேரு‌ந்து எரிப்பு வழக்கு: 3 பேருக்கும் 8ம் தேதி தூக்கு உறுதி

வேலூர்,செப்.23:தர்மபுரி பேரு‌ந்து எரிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றவாளிகள் 3 பேரையும் அக்டோபர் 8-ம் தேதி தூக்கிலிட சேலம் முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி ராகவன், வேலூர் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பினார்.

கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சென்னை தனிக்கோர்ட்டு தண்டனை வழங்கியது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தன. தர்மபுரியில் நடந்த போராட்டத்தின்போது, கோவை வேளாண்மை கல்லூரி பஸ் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஹேமலதா, கோகிலவாணி மற்றும் காயத்திரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோருக்கு சேலம் செசன்சு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இதுதவிர, 25 பேருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.

அதைத் தொடர்ந்து தண்டனை பெற்றவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்து, நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து கடந்த 30-8-2010 அன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றும் நடைமுறைகள் தொடங்கின.

அதன்படி அவர்கள் 3 பேருக்கும் எந்த தேதியில், எந்த நேரத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பதை முடிவு செய்து அறிவிக்கும் பணியை சேலம் கோர்ட்டு தொடங்கியது.

இந்த நிலையில் குற்றவாளிகள் நெடுஞ்செழியன், மாது மற்றும் முனியப்பன் ஆகிய 3 பேருக்கும், அக்டோபர் 8-ந் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ராகவன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவு (வாரண்டு) நேற்று சேலம் கோர்ட்டில் இருந்து குற்றவாளிகள் 3 பேரும் அடைக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தர்மபுரி பேரு‌ந்து எரிப்பு வழக்கு: 3 பேருக்கும் 8ம் தேதி தூக்கு உறுதி"

கருத்துரையிடுக