25 செப்., 2010

நியூயார்க் 9/11 தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம் - ஐ.நா.வில் அகமதி நிஜாத் உரை

ஐ.நா.சபை,செப்,25:நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதிநிஜாத். அவரது பேச்சைக் கண்டித்து அமெரிக்க குழுவினர் ஐ.நா.விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர்.

ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியதே அமெரிக்கா தான் என்று தான் உலகின் பெரும்பாலான மக்கள் நினைக்கி்ன்றனர். உலகளவில் சரிந்து வரும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும், சரிந்து விட்ட தனது பொருளாதாரத்தை சரி செய்யவும், வளைகுடாவில் தனது ஆதிக்கத்தை மீ்ண்டும் நிலைநாட்டி, இஸ்ரேலுக்கும் யூத சக்திகளுக்கும் உதவவும் அந்தத் தாக்குதலை திட்டமிட்டு அமெரிக்கா தான் நடத்தியது.

அமெரிக்க அரசில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று தான் பெரும்பாலான அமெரிக்க மக்களும், உலகின் பெரும்பாலான மக்களும், உலக அரசியல் தலைவர்களும் நினைக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அல்லது அந்தத் தாக்குதலை உண்மையிலேயே தீவிரவாதிகள் தான் நடத்தினர். ஆனால், அந்தத் தாக்குதலை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா என்றும் சொல்லலாம்.

இந்த நியூயார்க் தாக்குதலை முன் வைத்துத் தான், தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஆப்கானிஸ்தான் மீதும் இராக் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தது.

தான் மட்டும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, நாங்கள் (ஈரான்) அணு ஆயுதம் தயாரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்களையும் அமெரிக்கா வம்புக்கு இழுத்து வருகிறது என்றார்.

அகமதிநிஜாத் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே அமெரிக்க ஐ.நா. குழுவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளின் தூதர்களும் குழுவினரும் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பேசிய அகமதிநிஜாத், இதனால் நியூயார்க் தாக்குதல் குறித்து ஐ.நா. முழுமையான விசாரணை நடத்தி உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

அணு ஆராய்ச்சி விஷயத்தில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால், அது நேர்மையாகவும் மரியாதையுடனும் நடக்க வேண்டும்.

அடுத்த நாட்டுக்கு மரியாதை தராமல் செயல்பட்டால் பதிலுக்கு மரியாதை கிடைக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும். அதே போல ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து நமது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நினைத்தால் அதன் மீது கொஞ்ச நஞ்சம் உள்ள நம்பிக்கையும் போய்விடும்.

சர்வதேச அணு ஆராய்ச்சி மையத்தின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டே ஈரானிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மற்றபடி யாருடைய நெருக்குதலுக்கும் ஈரான் பணிந்ததில்லை, இனியும் பணியாது என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நியூயார்க் 9/11 தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம் - ஐ.நா.வில் அகமதி நிஜாத் உரை"

கருத்துரையிடுக