30 செப்., 2010

தீர்ப்புக்காக காத்திருக்கும் ஹாஷிம் அன்ஸாரி

லக்னோ,செப்.30:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கவிருக்கையில் லக்னோவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அயோத்தியாவில் பஞ்சிதோலா என்ற ஊரில் ஒரு சிறிய வீட்டில் ஆசுவாசத்தோடு 90 வயது முதியவர் ஒருவர் காத்திருக்கிறார். அவர்தான் வழக்குதாரரான முஹம்மது ஹாஷிம் அன்ஸாரி.

வழக்கு துவங்கும் பொழுது அன்ஸாரியின் வயது 30 ஐ தொடும். ஆரம்பக் காலங்களில் சக வழக்குதாரர்கள் 5 பேர் அன்ஸாரியுடன் இருந்தார்கள். அவர்களெல்லாம் கால ஓட்டத்தில் இவ்வுலகிற்கு விடை சொல்லிவிட்டார்கள். வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்து போராடிய ஒரு வழக்கின் தீர்ப்பை காணும் பாக்கியத்தை இறைவன் அளித்தது அன்ஸாரிக்கு மட்டுமே.

தீர்ப்பு வழங்குவதற்கான இடைக்காலத் தடையை நீக்கிய உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை ஆசுவாசமாக உள்ளதாக அன்ஸாரி கூறுகிறார்.

"இந்த தீர்மானத்தில் தேசம் முழுவதும் மகிழ்ச்சியுண்டாகும். வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டு செல்லும் இவ்வழக்கில் தீர்ப்பு வெளிவருவது ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரேபோலவே ஆசுவாசமளிக்கும்" என்று அன்ஸாரி கூறுகிறார்.

பாப்ரி மஸ்ஜிதில் விக்கிரகங்களை திருட்டுத்தனமாக வைத்த பிறகு அங்கு பூஜைச் செய்வதற்கு அனுமதிக்கோரி 1950 ஜனவரி 16-ஆம் தேதி ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் கோபால்சிங் விசாரத் என்பவர் தாக்கல் செய்த மனுவில் எதிர் கட்சிதாரராக அன்ஸாரி களமிறங்கினார். வழக்கை பின்னர் சன்னி செண்ட்ரல் வக்ஃப் போர்டு ஏற்றது.

பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக இவ்வழக்கை பயன்படுத்திய பொழுது இந்தியாவை நெருக்கடிக்கு உள்ளாக்கிய ஒரு வழக்காக பாப்ரி மஸ்ஜித் வழக்கு மாறியது.

இதற்கிடையே பாப்ரி மஸ்ஜித் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளால் தகர்க்கப்பட்டது. அறுபது வருடகால தனது போராட்டத்திற்கு வருகிற 30-ஆம் தேதி முடிவு ஏற்படும் என அன்ஸாரி ஆசுவாசமாக உள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு எவ்வாறிருந்தாலும், இரு சமூகங்களிடையே நிலவி வரும் நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படாமல் பாதுகாக்க தலைவர்கள் முன்வரவேண்டும் என அன்ஸாரி வேண்டுகோள் விடுக்கிறார்.

இனியொரு அரசியல் ஆதாயத்திற்கு பாப்ரி மஸ்ஜித் காரணமாகிவிடக் கூடாது. விருப்பமிருந்தாலும், நீதிமன்றத் தீர்ப்பை கேட்பதற்காக தான் லக்னோ நீதிமன்றத்திற்கு வரமாட்டேன் என அன்ஸாரி தெரிவிக்கிறார்.

"முதுமை என்னை வீட்டில் உட்கார வைத்துவிட்டது. தீர்ப்பு என்னவாயினும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.தீர்ப்பு சாதகமாகயிருந்தாலும், பாதகமாகயிருந்தாலும் அதனை பூட்டிய கதவுக்கு வெளியே முஸ்லிம்கள் ஒதுக்கிட வேண்டும். சாலையில் இறங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடுவதோ, கண்டனப் போராட்டம் நடத்துவதோ தேவையில்லை.

தீர்ப்பு சாதகமாக வரவில்லையென்றாலும் சட்டத்தின் வாயில்கள் திறந்தே உள்ளன. தீர்ப்பு எவ்வாறிருப்பினும் பாப்ரி மஸ்ஜித் புனர்நிர்மாணத்தை விரைவாக நிறைவேற்றும் வாய்ப்பு இல்லை.தீர்ப்பு எவ்விதத்திலும் அயோத்தியை பாதிக்காது. இங்கு ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்கள் போலவே வாழ்ந்து வருகிறோம். குழப்பத்தை ஏற்படுத்தியவர்களெல்லாம் வெளியேயிருந்து வந்தவர்கள். அவர்கள் அயோத்தியை அரசியல் போர்க்களமாக்கிவிட்டார்கள். இந்த பிரச்சனையை இத்தோடு முடித்துக் கொள்வோம். இல்லையெனில், இந்த தீயை அணைக்க ஒருபோதும் இயலாது." என்றும் அன்ஸாரி கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தீர்ப்புக்காக காத்திருக்கும் ஹாஷிம் அன்ஸாரி"

கருத்துரையிடுக