புதுடெல்லி,செப்.28:மத்திய அரசால் வாக்களிக்கப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவியை கஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது துஃபைல் அஹ்மதின் தந்தை உள்பட உறவினர்கள் நிராகரித்துவிட்டனர்.
எங்களுக்கு தேவை பிச்சையல்ல! நீதி! எனக்கூறி துஃபைலின் தந்தை முஹம்மது அஷ்ரஃப் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்த நிதியுதவியை நிராகரித்துவிட்டார்.
கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி துஃபைல் கொல்லப்பட்டார். ரஜவ்ரி கதலில் கனி மெம்மோரியல் ஸ்டேடியத்தின் அருகில் தனது தோழர்களுடன் துஃபைல் சென்றுக் கொண்டிருக்கும் வேளையில்தான் பாதுகாப்புப் படையினரின் கண்ணீர் குண்டு அவருடைய தலையில் தாக்கில் துஃபைல் மரணித்தார்.
தொடர்ந்து நடந்த கஷ்மீரிகளின் போராட்டத்தில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
"எனது மகன் மகத்தான லட்சியத்திற்காக உயிரை தியாகம் செய்துள்ளான்" என துஃபைலின் தந்தை கூறுகிறார்.
மேலும் "உயிர் தியாகிகளின் இரத்தத்தை விற்று காசு சம்பாதிக்க நாங்கள் விரும்பவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் தரலாம் எனக்கூறினாலும் வாங்கமாட்டோம்" என முஹம்மது அஷ்ரஃப் கூறுகிறார்.
"எங்கள் குழந்தையை கொலைச் செய்தவர்களோடு எந்த சமரசத்திற்கும் இடமில்லை. ஆட்சியாளர்களான உங்களுக்கு இச்சம்பவம் நிகழ்ந்திருந்தால் நீங்கள் நிதியுதவியை வாங்குவீர்களா? பணம் தருவதற்கு பதிலாக கொலையாளிகளான பாதுகாப்பு படையினரை தண்டிக்க வேண்டும். கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக இச்சம்பவத்தை திசைதிருப்ப முயல்வது அதிகாரிகளின் வழக்கம்" என துஃபைலின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "எங்களுக்கு தேவை பிச்சையல்ல! நீதி!"
கருத்துரையிடுக