22 செப்., 2010

ஃபலஸ்தீன் எல்லையில் இஸ்ரேலிய ராணுவம் தொடரும் என நெதன்யாகு

ஜெருசலம்,செப்.22:எதிர்கால ஃபலஸ்தீன் நாட்டின் கிழக்கு எல்லையில் இஸ்ரேலிய ராணுவம் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையேயான சமாதான பேச்சுவார்த்தை இஸ்ரேலின் சட்டத்திற்கு புறம்பான குடியேற்ற நிர்மாணங்களால் தோல்வியின் விளிம்பில் இருக்கும் வேளையில்தான் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் நெதன்யாகு இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அமைதி உடன்படிக்கைக்கு பிறகு ஃபலஸ்தீன் போராளிகள் மேற்கு கரையில் ஆயுதங்களை கடத்துவதை தடுப்பதற்குத்தான் ஜோர்டான் எல்லையில் ராணுவத்தை நிறுத்துவோம் என நியாயப்படுத்துகிறார் நெதன்யாகு.

சர்வதேச ராணுவத்தினருக்கு இப்பகுதியில் சுமூகமாக பணியாற்ற இயலாது எனவும் இஸ்ரேல் ராணுவத்தினர் மட்டுமே யூதர்களை பாதுகாக்க இயலும் எனவும் நெதன்யாகு நேற்று முன்தினம் அமெரிக்க யூதத் தலைவர்களின் மாநாட்டில் கூறியிருந்தார்.

ஆனால், இது ஒருபோதும் நடக்காது என ஃபலஸ்தீன் செய்தித் தொடர்பாளர் ஹுஸாம் ஸொம்லத் உறுதிப்படக் கூறியுள்ளார். எதிர்கால ஃபலஸ்தீன் நாட்டில் ஒரு இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் அனுமதி வழங்க முடியாது. இப்பகுதியின் அரசியல் சூழலில் சர்வதேச ராணுவத்தினர்தான் பாதுகாப்பை உறுதிச்செய்ய இயலும். அதேவேளையில், குடியேற்ற நிர்மாணத்தை முடக்கும் கால அவகாசத்தை நீட்டிக்கவேண்டுமென மேற்காசிய சமாதான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக செயல்படும் க்வார்டட் இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, ஐ.நா ஆகியவை அடங்கியதுதான் க்வார்டட் என்பதாகும். ஏற்கனவே இஸ்ரேல் அறிவித்த மொரட்டோரியம் காலாவதி இந்த மாதம் 30 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன் எல்லையில் இஸ்ரேலிய ராணுவம் தொடரும் என நெதன்யாகு"

கருத்துரையிடுக