31 அக்., 2010

குஜராத்தைவிட்டு இன்று வெளியேற அமித் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி,அக்.30:குஜராத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலைக்குள் வெளியேற அந்த மாநில முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அவர் ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அஃப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மனு மீதான அடுத்த விசாரணை நவம்பர் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. சிபிஐ மனுவின் நகலை அமித் ஷாவுக்கு அனுப்பி வைக்குமாறும், அது குறித்து நவம்பர் 12-ம் தேதி அவர் தனது பதிலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஷொராஹ்புதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்ட அமித் ஷா மூன்று மாதங்களாக சபர்மதி சிறையில் இருந்தார். அவருக்கு குஜராத் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்த சிபிஐ அதிகாரிகள், வெள்ளிக்கிழமை இரவே துணை பதிவாளரின் வீட்டுக்குச் சென்று தங்கள் மனுவை அவசர மனுவாக விசாரிக்க கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை நீதிபதி அஃப்தாப் ஆலம் வீட்டில் விசாரணை நடைபெற்றது.

சிபிஐ தரப்பில் மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் துளசி, அரசியல் செல்வாக்குமிக்க அமித் ஷா குஜராத்தில் இருந்தால் அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று வாதிட்டார்.

இதையடுத்து குஜராத்தை விட்டு வெளியேற அமித் ஷா தயாரா என்று அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உபேந்தர் யாதவிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இது குறித்து வழக்கறிஞர் துளசி செய்தியாளர்களிடம் கூறும்போது, சிறை விதிகளுக்கு முரணாக வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு அமித் ஷா விடுதலை செய்யப்பட்டு உள்ளார், அவரது அரசியல் செல்வாக்குக்கு இதுவே சிறந்த உதாரணம் என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத்தைவிட்டு இன்று வெளியேற அமித் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு"

கருத்துரையிடுக